வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகரில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.11.2023) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும். மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி மின் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிடவும், புதிதாக புயல் உருவாகவுள்ளதையொட்டி அதன்பொருட்டு பெய்யும் கனமழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிடத் தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும், அப்பகுதியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
கடந்த இரு தினங்களில் மழைநீர் தேங்கிய இடங்களைக் குறிப்பாகக் கண்காணித்து, அங்குள்ள நீரை அகற்றிட வேண்டும். மீண்டும் அப்பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் உயர்சக்தி மின் மோட்டார்களை வைத்து நீரினை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.