ஊரடங்கு முடிவுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்படும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் மதுக்கடைகளை திறப்பது, அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் நேரத்தை மாற்றியமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் மதுக் கடைகளை திறந்தால் அருகேயுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு மது அருந்த அதிகம் பேர் வருவர். அதன் மூலம் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே ஊரடங்கு முடிந்தவுடன் 17-ஆம் தேதிக்கு பிறகு மதுக்கடைகளை திறப்பது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கரோனாவுக்கு மத்தியில் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதை பார்த்தால் கரோனா தொற்று விரைவில் நீங்காது என தெரிகிறது. எனவே நாம் கரோணாவுடன் போராட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும். உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இவற்றை தொடர்ந்து பின்பற்றினாலே கரோனா தொற்றிலிருருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஊரடங்கினால் அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு வருவாய் இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கி பொருளாதாரம் மேம்பட உதவி புரியவேண்டும். புதுச்சேரியின் வருவாய் குறைந்துவிட்டது. இதை மத்திய அரசுதான் ஈடு செய்ய வேண்டும். மத்திய அரசு பிறப்பித்த முழு ஊரடங்கால் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே புதுச்சேரிக்கு உதவ வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.
மத்திய அரசிடம் நிதி உள்ளது பாரபட்சம் பார்க்காமல் மாநிலங்களுக்கு உதவ வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து குறுகிய காலத்தில் எந்தெந்த திட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்றினால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் அதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எவ்வாறு நிதி ஆதாரத்தை வழங்கும் என்று அந்த குழு பரிந்துரை செய்ய வேண்டும்.
'மத்திய அரசு உடனடியாக புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். மத்திய நிதி குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும். கடன் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் செவி சாய்ப்பார் என்று நம்புகிறேன்". இவ்வாறு அவர் கூறினார்.