இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன கத்துவா 8 வயது சிறுமி பாலியல் படுகொலை மற்றும் உன்னாவ் சிறுமி பாலியல் வன்புணர்வு பிரச்சனைகள். இது போதாதென்று ஒவ்வொரு நாளும் சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனைகள், சட்டங்கள் நடைமுறையில் இல்லை என குற்றச்சாட்டுகள் வலுத்துவரும் நிலையில், பெண்களின் மீது பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியல் லகார்டே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், ‘இந்தியாவில் சில அருவருக்கத்தக்க சம்பவங்கள் சமீபத்தில் நடந்தேறியுள்ளன. பிரதமர் மோடியில் தொடங்கி எல்லா அரசு அதிகாரிகளும் பெண்கள் நலனில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்; இது இந்தியப் பெண்களுக்கு அத்தியாவசியமான ஒன்று’ என பேசியுள்ளார். மேலும், ‘டேவோஸ் நகரில் பிரதமர் மோடி தனது உரையை நிகழ்த்தி முடித்ததும், நீங்கள் இந்தியப் பெண்களைக் குறித்து எதுவும் பேசவில்லை என்பதை அவரிடம் குறிப்பிட்டேன். மற்றும் இந்தியப் பெண்களைப் பற்றி பேசுவதை மட்டும் குறித்த கேள்வியல்ல அது’ எனவும் தெரிவித்துள்ளார்.
தனது இந்தக் கருத்து ஐ.எம்.எஃப். தலைவர் பொறுப்பில் இருந்து நான் கூறுவதல்ல எனக் கூறியுள்ள அவர், கிறிஸ்டியன் லகார்டேவான தனது தனிப்பட்ட கருத்து எனவும் விளக்கியுள்ளார்.