Skip to main content

திருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா? - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Published on 12/08/2018 | Edited on 12/08/2018
 


 

 

திருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா? அ.தி.மு.க அரசுக்கு, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து உண்மை நிலைகளைப் பேசியதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து, அவர் நாடு திரும்பியதும் பெங்களூரு விமானநிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கினை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர 11வது மாஜிஸ்திரட் நீதிமன்றம், திருமுருகன் காந்தி அவர்களின் செயல்பாடுகளில் தேசத்துரோக நடவடிக்கை எதுவுமில்லை என காவல்துறையை கடிந்துகொண்டதுடன், அவரை சிறைக்கு அனுப்பவும் மறுத்துவிட்டது.
  thiru


 

 

நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளான பிறகும் அ.தி.மு.க. அரசின் காவல்துறை, தன் கடுமையான இயல்பை மாற்றிக்கொள்ளாமல், எப்படியும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்தில், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கினை தூசு தட்டி எடுத்து கைது செய்து சிறைக்கு அனுப்பியிருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயலாகும்.

போராடுகிற மக்கள் மீது துப்பாக்கி சூடு, அதனைக் கண்டித்து குரல் எழுப்புவோர் மீது தேசத்துரோக வழக்கு என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக நெறிமுறைகளை பூட்ஸ் காலால் நசுக்கும் சர்வாதிகாரப் போக்காகும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வக்கற்ற ஆட்சியாளர்கள் காவல்துறை மூலம் உரிமைக்குரலை ஒடுக்கிவிடத் துடிக்கும் இந்த ஆபத்தான போக்கிற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, திருமுருகன் காந்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்