2017-18 கல்வி ஆண்டுக்கான அனுமதியின்போது சாதி, மத அடையாளங்களை 1.2 லட்சம் குழந்தைகள் துறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநில சட்டசபையில் நேற்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத் அவர்சார்ந்த துறை குறித்து பேசினார். அப்போது, 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையில் விண்ணப்பித்த 1 லட்சத்து 23 ஆயிரத்து 630 மாணவர்கள், தங்கள் விண்ணங்களில் சாதி, மதம் உள்ளிட்ட இடங்களை நிரப்பாமல் விட்டுள்ளதாக தகவல் வெளியிட்டார். இது நமது சமூகத்தில் மதநல்லிணக்கம் நிலைத்திருப்பதற்கான ஒப்பற்ற சான்று எனவும் அவர் பெருமிதம் கொண்டார்.
இந்த விவரங்கள் அம்மாநிலத்தில் உள்ள 9 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து சேகரிக்கப்பட்டது. ‘நாம் சார்ந்த, நமக்கான அடையாளங்களாக சொல்லப்படும் சாதி, மதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தினாலே, அங்கு படிநிலைகளும், பாகுபாடுகளும் இயல்பாகவே எழுகின்றன’ என தனது குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மத அடையாளத்தைத் துறந்த தந்தை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.டி.பலராமன், சிபிஎம் எம்.பி. ராஜேஷ் மற்றும் பிரபல கால்பந்தாட்ட வீரர் சி.கே.வினோத் ஆகியோரும் தங்கள் குழந்தைகளின் சாதி, மதம் உள்ளிட்டவற்றை குறிப்பிடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.