Skip to main content

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
 NIA officials raided the homes of Naam Tamil Party officials

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் மூலம் என்ஐஏ அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.