அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசுத் திட்டங்களின்பால் மக்களிடம் ஈடுபாட்டை உருவாக்கி, அத்திட்டங்களின் பயன்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பணி ஆகும். இத்துறையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரங்கள்) உள்ளிட்ட பல ஊழியர்கள் உள்ளனர். அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தெரிவித்து, அரசு வாகனங்களில் அழைத்துச் சென்று அரசுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து, அதன் முலம் அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது இவர்களின் பணி ஆகும்.
பத்திரிக்கையாளர்களின் பெயரால் ஊழல்!
ஆண்டு தோறும் தமிழக அரசு பத்திரிக்கையாளர்களுக்கு பல ஆயிரம் ருபாய்களை சிற்றுண்டி செலவாக வழங்கி வருகிறது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ( செய்தி) இந்த பணியினை முழுமையாக பார்க்க வேண்டும். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரங்கள்) பத்திரிக்கையில் அரசு விளம்பரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் அரசால் வழங்கப்பட்டுள்ள வீடியோ வேனில் அரசின் சாதனை விளக்க படக்காட்சி களை பொதுமக்கள் கூடும் இடங்களில் உடனிருந்து காண்பிக்க வேண்டும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இவர்களின் பணியை ஒருங்கி்ணைத்து மேற்பார்வை செய்வார். ஆனால் இத்துறையில் பத்திரிக்கையாளர்களின் பெயரைச் சொல்லி பல்வேறு ஊழல்கள் நடைபெறுகிறதே தவிர, அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. இதற்கு விருதுநகர் மாவட்ட பி ஆர் ஓ அலுவலகம் சரியான உதாரணம்.
பணியில் அலட்சியம்!
உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டியதில்லை; வேலை வாய்ப்பு முன்னுரிமையும் தேவையில்லை. ஒரே ஒரு டிகிரி இருந்தால் போதும். முதலமைச்சரே நேரடியாக நியமனம் செய்துவிடுவார். ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் மகன்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் இவ்வாறு பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது. காரியாபட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் கரியநேந்தல் ராமமூர்த்தியின் மகன் வெற்றி, விருதுநகர் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஆவார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வலதுகரம் என்று சொல்லப்படும் ராஜவர்மனின் அக்கா மகன் முத்துக்குமார் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரங்கள்) ஆவார். இவர்கள் தங்களது சொந்த மாவட்டத்திலேயை பணியைப் பெற்றுக் கொண்டதால் தங்களது பணியை சரிவர பார்ப்பது இல்லை. அலுவலகத்திற்கு உரிய நேரத்துக்கு வருவதில்லை. அப்படி வராத நேரங்களில், அ/ப - அதாவது அலுவலகப் பணி என்று வருகைப் பதிவேட்டில் எழுதப்படுவது வழக்கம். அதனைஅடித்து திருத்தி கையொப்பம் இடுகின்றனர். மாதம் ஒருமுறை மீட்டிங் ஏற்பாடு செய்து செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய ஏபிஆர்ஓ வெற்றி, அதனைச் செய்வதில்லை. மேலும் துறைவாரியாக உள்ள அரசுத் திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கான முன்னறிவிப்புகள், சாதனைகள், அரசு விழாக்கள் குறித்த செய்திகளை முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்குத் தருவதில்லை. தகவல் தெரிந்து வந்தாலும் இருக்கை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளைஅலுவலக உதவியாளர் மூலமாக ஏற்பாடு செய்து தருவதில்லை.
பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்!
பத்திரிக்கையாளர்கள் செய்திகள் குறித்த கூடுதல் விபரங்கள் புள்ளிவிபரங்கள் குறித்து தகவல் கேட்டால் பிரஸ் ரிலீஸ்ஸில் கொடுத்ததை மட்டும் போடுங்க சார் என்று கர்வமாக பதில் சொல்கிறார் ஏபிஆர்ஓ வெற்றி. மேலும் துறைவாரியாக மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்களை காட்டுவதற்கு பத்திரிகையாளர்களை பிரஸ் டூர் அழைத்துச் செல்வதில்லை. மற்றொரு ஏபிஆர்ஓ முத்துக்குமார் கிராமங்களுக்கு வீடியோ காட்சிகள் காட்ட நேரடியாகச் செல்வதில்லை ஓட்டுனர் மற்றும் வாகன ஆப்ரேட்டர் மட்டுமே செல்கின்றனர். ஆனால் தான் சென்றதாகக் கணக்கெழுதி பயணப்படியை எடுத்து கொள்கிறார் முத்துக்குமார். அங்கு செல்ல வேண்டிய அவர், அதைச் செய்யாமல், அனைத்து அரசு விழாக்களுக்கும் வந்து துறை அதிகாரிகளை மிரட்டுவதோடு மட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் பேட்டி எடுக்கும் போது, அவர்களை கேள்வி கேட்க விடாமல், “பேட்டி போதும் நிறுத்துங்கள்” என்று பத்திரிக்கை யாளர்களை மிரட்டுகிறார்.
அரசுப் பணியில் அரசியல்!
விருதுநகர் மாவட்ட பிஆர்ஓவாக இருப்பவர் ஜெகவீரபாண்டியன். இவர் அமரராகிவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. க.சுப்புவின் மகன் ஆவார். ஏபிஆர்ஓக்களின் நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டு கண்டிக்கும்போது, “நீங்கள் திமுக காரர். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” என்று அலட்சியம் செய்துவிட்டு, அமைச்சரிடம் நாங்கள் பேசி விட்டோம் என்றும், பேசிக் கொள்கிறோம் என்றும் பி.ஆர்.ஓ.வை மிரட்டுகிறார்கள். பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தரும் வாட்ஸ் அப் குரூப்பில் கூட பிஆர்ஓவை அட்மின் கூட ஆக்காமல், தாங்களே அட்மினாக இருந்து கொண்டு, உரிமைகளைக் கோரி பதிவிடும் பத்திரிக்கையாளர்களை குரூப்பை விட்டு நீக்குவது போன்ற ஆணவ செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்டுகொள்ளாத கலெக்டர்!
மாவட்ட ஆட்சியர் சிவஞானமும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் உறவினர்கள் என்பதால் எதையும் கண்டு கொள்வதில்லை அதற்கு உதாரணம் சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி செலவினங்களுக்கு ரூ.2.75 லட்சத்திற்கு முன்னாள் பிஓர்ஓ அருள்பதி கையைழுத்து கேட்க, கணக்கும் ஆதாரமும் கேட்டு கையெழுத்திட மறுத்தார் கலெக்டர். அருள்பதி மாற்றலாகிச் சென்றதும், அதே விழாவிற்கு இந்த இரண்டு ஏபிஆர்ஓக்கள் ரூ. 4.75 லட்சம் என்று அதை விட அதிக தொகை எழுத, எந்த கேள்வியும் கேட்காமல் கையெழுத்திட்டதுதான் மாஸ்டர் பீஸ். சொந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் உறவினர்களாக இருப்பதால் இவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை என அதிகாரிகளோடு சேர்ந்துகொண்டு விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்களும் புலம்பி வருகின்றனர்.
தற்போது, விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அவலங்கள் குறித்து ஆட்சியர் சிவஞானத்திடம், விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள் முறையிட்டிருப்பதால், செய்தித்துறையே செய்திகளில் அடிபடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது.