Skip to main content

’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்?’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின் 

Published on 11/10/2018 | Edited on 12/10/2018
sm

 

’’பொடா,தடாவை எல்லாம் பார்த்த கோபால் எடப்பாடியைப்பார்த்தா பயந்துவிடப்போகிறார்.   ஜெயலலிதாவையே பார்த்தவர் அவர்.   அட்டைப்படத்தில் ஜெயலலிதாவை ஹிட்லர் போல சித்தரித்தவர் அவர்.  ஹிட்லருக்கே பயப்படாதவர் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்.  ஹிட்லருக்கே பயப்படாதாவர் இந்த எடுபிடிக்கா பயந்துவிடப்போகிறார்’’ என்று ஆளுங்கட்சியினரை வெளுத்து வாங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

gggg

 

ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு   10 மணி நேர சட்டப்போராட்டத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.  ஆசிரியரின் விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்று ஊடகத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில்,  சென்னை பெரியார் திடலில் ’‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்,- பாராட்டும்’ எனும் தலைப்பில் இன்று  11.10.2018 வியாழக்கிழமை மாலை கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகளை வெளுத்து வாங்கினார். 


’’ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையில் நம்முடைய நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்து அதன் மூலமாக நடந்து முடிந்திருக்கக்கூடிய, இந்த சர்வாதிகாரத்தை கண்டிக்கக்கூடிய வகையில், எழுத்து சுதந்திரத்தை,  பேச்சு சுதந்திரத்தை காப்பாற்ற நின்றிருக்கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.   


கோடி ரூபாய் கொடுத்தாலும் கோபாலுக்கு இந்த விளம்பரம் கிடைக்காது என்று சொன்னார்கள்.   நான் சொல்கிறேன்.  எத்தனை ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் கிடைக்கவே கிடைக்காது.   அது நம்முடைய நக்கீரன் கோபாலுக்கு கிடைத்திருக்கிறது.   நம்முடைய கோபாலை கைது செய்து 10 நேரத்தில் விடுதலை செய்திருக்கிறார்கள்.   

 

ss

 

கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து வரும்போதெல்லாம் முதலில் குரல் கொடுப்பவர் ஆசிரியர் கி.வீரமணி.  அப்படித்தான் இந்த கூட்டத்திற்கு அவர் அவசர அவசரமாக ஏற்பாடு செய்திருக்கிறார்.     

 

கோபாலை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்பதற்காக கூட நாம் இந்த கூட்டத்தை நடத்தவில்லை.  இந்த கைதுக்கெல்லாம் நக்கீரன்கோபால் பயப்படப்போவதில்லை.   பொடாவைப்பார்த்தவர்.  தடாவைப்பார்த்தவர்.  எத்தனையோ அவதூறு வழக்குகளை சந்தித்தவர்.    எத்தனையோ சிறைகளில் அடைபட்டு இருந்தவர்.  அதனால் அவர் இதுபற்றியெல்லாம் சிறுதுளி கூட கவலைப்படபோவது கிடையாது.

 

 பொடா,தடாவை எல்லாம் பார்த்த கோபால் எடப்பாடியைப்பார்த்தா பயந்து விடப்போகிறார்.   ஜெயலலிதாவையே பார்த்தவர் அவர்.   அட்டைப்படத்தில் ஜெயலலிதாவை ஹிட்லர் போல சித்தரித்தவர் அவர்.  ஹிட்லருக்கே பயப்படாதவர் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்.  ஹிட்லருக்கே பயப்படாதாவர் இந்த எடுபிடிக்கா பயந்துவிடப்போகிறார்.    கோட்டையில் இருக்கக்கூடியவர்கள் இவ்வளவு ஊழல் செய்திருக்கிறோமே என்று ஊழலைப்பார்த்து பயந்துகொண்டிருக்கிறார்கள்.   கிண்டியில் இருக்கக்கூடியவர் இன்றைக்கு யாருக்கு பயந்துகொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.   நான் பயப்படவில்லை... சொல்லிவிடுகிறேன்.  அவர் நிர்மலா தேவிக்கு பயந்துகொண்டிருக்கிறார்.    இதை சொல்லுகிற காரணத்தினால் என் மீதும் வழக்கு வரும்.   வரவேண்டும் என்று எதிர்பார்த்துதான் பேசுகிறேன்.  

 

ச்ட்ட்ட்ட்

 

முத்தரசன் பேசிய பேச்சுக்கு இன்று இரவு அவர் வீட்டிற்கு காவல்துறை  போகும்.  அதற்காக அவரும் சரி,  நாங்களும் கவலைப்படபோவதில்லை.    நாங்கள் எல்லாம் ஊழல் செய்துவிட்டு,  சொத்து சேர்த்துவிட்டு நான்கு வருட தண்டனை அனுபவிப்பவர்கள் கிடையாது.  நாட்டிற்காக,  சமுதாய பிரச்சனைகளூக்காக,  நம் இனத்திற்காக, மொழிக்காக  போராடுகிறவர்கள்.  அதற்காக சிறை செல்ல நாங்கள் என்றைக்கும் தயங்காதவர்கள்.   

 

கவர்னர் மீது ஒரு சந்தேகம் வருகிறது.   அந்த பிரச்சனை வந்த நேரத்திலே நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம்.   எல்லா கட்சியினரும்,  எல்லா அமைப்பினரும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.   
நிர்மலா தேவி பேசிய பேச்சுகள் ஒலிபரப்பப்படுகின்றன.   அந்த பேச்சில் கவர்னரும் பெயரும் அடிபடுகிறது.   ஆகவே, நீதிவிசாரணை வேண்டும் என்கிறோம்.   சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.   இந்த நிலையில் கவர்னரே ஒரு விசாரணை கமிஷன் அமைக்கிறார்.   நிர்மலா தேவி இன்றோரு 178 நாட்கள் சிறையில் இருக்கிறார்.   8 முறை அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.   இங்குதான் சந்திகேகப்படுகிறோம்.  இதைப்பற்றி கோபால் எழுதியதில் தவறில்லை.  அதற்காக கோபால் கவலைப்பட வேண்டும்.  நாங்கள் இருக்கிறோம்.    இது ஒட்டுமொத்த பத்திரிகைகாரகர்களின் குரல்.  


மத்தியிலே ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா,  காவல்துறையையும்,  நீதித்துறையையும் கொச்சைப்படுத்தி,  அசிங்கப்படுத்தி பேசிய பேச்சு,   அதற்கு அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு,  அதனால் அவரை ஏன்  கைது செய்யவில்லை?   இந்து அறநிலையத்துறையினரின் குடும்ப பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜா மீது ஏன் வழக்கு பாயவில்லை.   பெரியாரின் சிலையையும் உடைக்க வேண்டும் என்று பேசிவிட்டு,  தெம்போடு, துணிச்சலோடு காவல்துறையின் துணையுடன்  திரிந்துகொண்டிருக்கின்ற எச்.ராஜாவை கைது செய்ய இந்த ஆட்சிக்கு யோக்கியதை இல்லை.   திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர்.  அவரும் பிஜேபி கட்சியை சேர்ந்தவர்.   பெண் நிருபர்களையெல்லாம் எப்படி கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறார். அவர் மீதும் வழக்கு போடப்பட்டது.   நீதிமன்றமும் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.    அவரை கைது செய்யும் துணிச்சல் இந்த ஆட்சிக்கு இல்லை.   ஆனாலும் மத்திய அரசின் துணையோடு இந்த ஆட்சி சர்வாதிகாரம் செய்துகொண்டிருக்கிறது.  இதை எதிர்க்க வேண்டிய கட்டம் வந்திருக்கிறது.  

கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.   கவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து நாம் போராடுவோம்; வெற்றி பெறுவோம்.’’

 

படங்கள்:  எஸ்.பி.சுந்தர்,   ஸ்டாலின், அசோக்குமார்

சார்ந்த செய்திகள்