தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், பல்கலைக்கழக துணை வேந்தர் சீ. சௌமியா, பல்கலைக்கழக பதிவாளர் சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கும், கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக் கலைஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பாடகி பி. சுசீலா, பி.எம். சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் அவருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதைப் பாடியிருக்கிறேன். ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை’. அதனால் மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுத்தான், நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னேன்.
இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே செயல்படுவார் எனக் கடந்த 2013 ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதாவின் அறிவிப்பை உள்ளபடியே மனதார பாராட்டுகிறேன். முதலமைச்சரே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் வளரும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடைய முதலமைச்சரான நான் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருப்பதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற வகையில் முடிவுகளை எடுக்க முடிகிறது. அதனால் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதற்காக சட்ட முன்வடிவுகளையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்றது. நல்ல செய்தி வரும்.
செய்திகளில் பார்த்திருப்பீர்கள், நாளிதழில் படித்திருப்பீர்கள், மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையில், நேற்றைய தினம், நீதிபதிகள் கருத்துக்களை அதில் சொல்லியிருக்கிறார்கள். ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை கல்வி மானிய பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். இப்படி மாற்றினால்தான் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும். நான் தமிழ்நாட்டிற்காக மட்டும் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களை சேர்த்துத்தான் சொல்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுபோல, கல்விதான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.
இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியம் ஒரு கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம், நூலகம், கற்றல் மேலாண்மை அமைக்க 1 கோடி ரூபாய் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.