பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து நக்கீரன் வெளியிட்ட செய்தியை எதிர்த்து பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு நக்கீரன் ஆசிரியரை ஆஜராகக்கூறி சம்மன் அனுப்பியது, மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை. அந்த வழக்கில் ஆஜரான வக்கீல் எல். சிவக்குமார் இவ்வாறு கூறினார்.
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நக்கீரன் ஆசிரியர்மீது புகாரளித்துள்ளதாக நேற்று மாலை 5 மணிக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் நக்கீரன் ஆசிரியர் இன்று காலை 11 மணிக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஊரில் இல்லாததால் வர இயலவில்லை, அவரது வழக்கறிஞராக நான் இங்கு வந்து சில சட்ட விளக்கங்களைக் கூறியுள்ளேன். இந்த வழக்கில் அவர் அளித்துள்ள புகாரில், அவரையும், அவரது குடும்பத்தையும் பற்றி அவதூறான செய்திகள் பரப்பப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அப்படி அது அவதூறான செய்தியாக இருந்திருந்தால், சட்டப்படி அவர் மானநஷ்ட வழக்கோ, இழப்பீடு கேட்டோதான் வழக்கு தொடர முடியும்.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதையும்தாண்டி அரசாங்கமே அதை சிபிஐக்கு மாற்றியுள்ளது. அவர்கள் இருவரும் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சென்னையில், விசாரணைக்கு அழைப்பது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனால் இந்த சம்மனை திரும்பப் பெறுங்கள், இந்த சம்மன் சட்டப்படி செல்லாது அப்படினு சொல்லிருக்கோம். அதை அவர்கள் வாங்கிவிட்டு இது சம்மந்தமாக நாங்கள் தகவல் தெரிவிக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
எஃப்.ஐ.ஆர். இதுவரை பதியப்படவில்லை அப்படினு சொல்லிட்டாங்க. புகாரைப் படிக்கவேண்டுமெனக் கேட்டபோது அதைத்தரவில்லை. புகார் இருப்பதாகக் கூறுகிறார்கள், புகாரை நாங்கள் பார்க்கவும் இல்லை. பொள்ளாச்சி ஜெயராமன் புகாரளித்துள்ளார். இந்த சம்மனை நீங்கள் அனுப்ப முடியாது, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. டிஜிபியும், அரசும் ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள். அவர்களைமீறி இப்படி செய்யமுடியாது எனக் கூறியுள்ளேன்.