ஆளுநர் பற்றிய அவதூறு என்பது குற்றச்சாட்டு. ஆளுநர் யார்? ஒரு "அரசியல் சட்ட அதிகாரம்". அது மட்டுமின்றி, "ஹிட்டவாடா { மக்கள் ஏடு } " என்ற நாகபுரியிலிருந்து வெளிவரும் மத்திய இந்தியாவின் ஒரு பிரபல நாளேட்டின் ஆசிரியராக, 2011 ல் பொறுப்பெடுத்தவர் பன்வாரிலால் புரோஹித். 1911 ல் "ஹிட் டவாடா" இதழ்,கோபாலகிருஷ்ண கோகலேவால் நாகபுரியில் தொடங்கப்பட்டது 2011 ல் புரோஹித் நிறுவனம் என்ற நிறுவனத்தால் கையிலெடுக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்தான் நமது இன்றைய தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இவர் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நாகபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2011 ல் இந்த இதழின் நூறாவது ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் தலைமையேற்றவர் அன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டில்.
தொடங்கும்போது, இந்த இதழ் சுதந்திர போராட்ட வீரர் சுஜால் என்பவரால், ஒரு சுதந்திரமான இதழாகத்தான் உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், நாகபுரியில் இருந்து வெளிவந்த முதல் ஆங்கில ஏடு இதுதான். அதற்குப்பிறகு இந்த இதழுக்கு போட்டியாக "நாகபுரி டைம்ஸ்" என்ற ஏடு வந்தது. அதுவும் பாதியிலேயே "திவாலாகி" நின்று போனது. "ஹிட்டவாடா"இதழ் ,'முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தார்" மூலம், மறைந்த வித்தியா சரண் ஷுக்லா வால் கொண்டுவரப்பட்டது. இப்போது, மத்திய இந்தியாவிலேயே, நாகபுரியிலிருந்தும், ராய்பூரிலிருந்தும் வெளிவருகிற பிரபல ஆங்கில ஏடாக இருக்கிறது. மத்திய இந்தியாவில் தினசரி இரண்டு லட்சம் பிரதிகளும், நாகபுரி நகரில் மட்டும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பிரதிகளும் விற்பனையாகிறது. ஒரே நேரத்தில், நாகபுரி, ஜபல்பூர், ராய்ப்பூர், போபால் ஆகிய நகரங்களில் இருந்து இந்த ஏடு வெளிவருகிறது. "ஹிட்ட வாடா" ஏட்டின், பிராந்திய மொழி ஏடுகளும் வெளிவருகின்றன. நாகபுரியை தலைநகராகக் கொண்ட பிராந்தியம் " விதர்பா" என அழைக்கப்படுகிறது. அந்த விதர்பா பிராந்தியத்தில், நாகபுரிக்கு வெளியே விற்பனையாகும்," விதர்பா லைன்ஸ்" ஏடும் வெளிவருகிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில், "சட்டிஸ்கர் லைன்ஸ்" என்ற ஏடு வெளியாகிறது.
"மத்தியபிரதேச லைன்ஸ்" என்ற ஏடு, போபாலில், மற்றும் ஜபல்பூரின் சுற்றுப் பகுதிகளிலும் வெளியிடப்படுகிறது. மேற்கண்ட ஏடுகள் அனைத்தும் "ஹிட்டவாடா" குழுவிலிருந்து, வெளியிடப்படுகிறது. இவை தவிர, துணை ஏடுகளாக,திங்கள் கிழமைகளில்," மணி { பணம்}" என்ற ஏடும், செவ்வாய் கிழமைகளில் " பியூச்சர் {எதிர் காலம்}" என்ற ஏடும், புதன் கிழமைகளில், " பெண்கள் உலகம்" என்ற ஏடும், சனிக் கிழமைகளில் "
'டிவிங்கில் ஸ்டார் " என்ற ஏடும், ஞாயிற்றுக் கிழமைகளில்," இன்சைட்" என்ற ஏடும், அது தவிர," தி நாலெட்ஜ் { அறிவு } " என்ற துணை ஏடு, குறிப்பாக பள்ளிகளில், குழந்தைகளுக்காக என்று கொண்டுவரப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து ஏடுகளையும் வெளியிடும் ஒரு "தாய் நிறுவனம்" இது என்றால், இதன் "ஆசிரியராக" இருந்தவருக்கு எவ்வளவு அறிவும், அனுபவமும், முதிர்ச்சியும், நிதானமும் இருக்கும் என நாம் எண்ணிப்பார்க்க முடிகிறது. அப்படி இந்த நிறுவனத்தின் ஆசிரியராக இருந்தவர்தான், நமது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள். அப்படி இருக்கும்போதும் எப்படி அவர் இந்த முதிர்ந்த வயதிலும், ஒரு கட்டுரை வெளிவந்து சில மாதங்கள் கழித்து, அந்தக் கட்டுரையில் "தன்னைப்" பற்றி செய்தி வந்திருக்கிறது என்று சொல்லி, அதில் தான் வேறுபட்டாலும், அதற்காக, ஒரு பிரபல தமிழ் இதழ் ஆசிரியரை, அதுவும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு இதழின் வெளியீட்டாளராகவும் இருப்பவரை, இன்னமும் கூறப்போனால், "வாரம் மூன்று இதழாக" வெளிவருகின்ற ஏட்டின் ஆசிரியரை,"இந்திய தண்டனைச் சட்டம் 124 ன்" கீழ் கைது செய்யச் சொல்லி, தனது ஆளுநர் அலுவலகம் மூலம் புகார் கொடுக்க வைக்க முடிகிறது என்றால், இது "நிதானமாக" செயல்படுபவர்களால்,"சாத்தியப்படாத" ஒன்றாகவே, நமக்கெல்லாம்,தெரிகிறது.
விவரம் தெரியாதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள், அதிகாரத்தில் இருக்கும்போது, எந்த "கட்டளையையும்" இடுவது நாட்டில் நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால், அனைத்து அனுபவங்களும் கொண்டவர்கள், இதுபோன்று நடந்து கொள்வது சதாரணமாக எதிர் பார்க்க கூடியது அல்ல. அதேசமயம், மேற்கண்ட சட்டப் பிரிவு, "அரசியல் சட்ட அதிகாரத்தில் உள்ளவர்களை, பலாத்காரமாக பணி செய்ய விடாமல் தடுப்பது" என்பது எங்கே வந்தது இந்த விஷயத்தில்? என்றே நாடு கேட்கிறது. அதனால், மக்கள் மத்தியில், பொதுத் தளத்தில், "சர்ச்சைக்குள்ளான விஷயத்தில்" யார் மீது கேள்விக்கு கணைகள் எழும் என்பது சொல்லாமலேயே விளங்கக்கூடியது.
- டி.எஸ்.எஸ்.மணி
(மூத்த பத்திரிகையாளர்)