கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாதோப்பு குறுக்குரோடு என்ற இடத்தில் ஆறுமுகம் என்பவர் கோயில் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு மதுபான போதையில் குறிசொல்லி வருவது வழக்கம். இவர் மீது நரபலி உள்ளிட்ட குற்றவழக்குகள் உள்ளது. இவர் கோயிலுக்கு பின் புறம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து ரூ 1 கோடி மதிப்பில் பெரிய இரண்டு கட்டிடம் கட்டியிருந்தார். இதனை நீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் அகற்றுவதற்காக வருவாய்துறை, காவல்துறையினருடன் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஆறுமுகம் மற்றும் ஆதரவாளர்கள் உடலில் மண்ணெண்னையை ஊற்றிக்கொண்டு கோட்டாட்சியர் மீதும் மண்ணெண்யை ஊற்றி கொலை செய்ய முயற்சித்தார்கள். இதுகுறித்து அவர் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் என் மீது மண்ணெண்னை ஊற்றி கொலை செய்ய முயற்சித்தார்கள் என்று புகார் கொடுத்துள்ளார். இது குறித்து கடுமையான வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு செய்து காவல்துறையினருக்கு உத்திரவிட்டார்.
ஆனால் இதனை ஒரு பொருட்டாக கருதாத காவல்துறை ஆறுமுகம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் மீது 506/1 உள்ளிட்ட எளிமையாக வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் வழக்கை பதிவு செய்து இருந்தார்கள். மேலும் இந்த வழக்கை விசாரணையில் சரிகட்டப்படும் என்று வெளிப்படையாகவே காவல்துறையினர் கூறியிருந்தார்கள்.
இதுகுறித்து நக்கீரன் இணையத்தில் கடந்த 18-ந்தேதி கோட்டாட்சியர் ’கொலைமுயற்சி வழக்கை நீர்த்துபோக செய்யும் காவல்துறை’ என்ற தலைப்பில் செய்தி கட்டுரை படங்களுடன் பதிவு செய்யப்பட்டது. இந்த செய்தியை பல தரப்பு பொதுமக்கள் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சமூகவலைதளம் மூலமாக பதிவு செய்தார்கள். சமூக வலைதளம் மூலமாக அனைத்து மக்களிடம் வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து நரபலிசாமியார் ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேர் மீது 307 வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் ஆறுமுகத்தை இன்னும் கைது செய்யவில்லை. அவர் வெளிப்படையாக வந்து செல்கிறார் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். காவல்துறையோ ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை தேடுவதுபோல் ஆறுமுகத்தை தேடுவது வருத்தமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.