பொள்ளாச்சி பாணியில் வசதி வாய்ந்த பெண்களிடம் நெருங்கிப் பழகி அதை வீடியோவாக எடுத்து கடைசியில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்த சுஜி என்ற காசி குறித்து சென்னையைச் சோ்ந்த பெண் டாக்டா் ஒருவா் கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாத்-க்கு இ-மெயிலில் புகார் அனுப்பியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கோட்டார் போலீசார் சுஜியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஜியின் தந்தை தங்கபாண்டியன் நாகா்கோவிலில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். பள்ளியில் படிக்கும்போதே பெண்களுக்கு காதல்வலை வீசி பழகிபோன சுஜி, நாளடைவில் அதைத் தொழிலாக வைத்து கொண்டு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தான். இதற்காக ஆயுதமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கைத் தொடங்கி பயன்படுத்தினான்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுஜி பல்வேறு பெயா்களில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை வைத்து கொண்டு அதில் தொடா்பை ஏற்படுத்தும் வசதியான பெண்களை செலக்ட் செய்து அவா்களிடம் தன்னுடைய அன்பான பேச்சால் அவா்களுடைய இதயங்களில் இடம் பிடித்து நெருங்கிப் பழகி, கடைசியில் தன்னுடைய நெருக்கத்தை ஓட்டல் அறைகளில் முடித்து அதை வீடியோவாகவும் எடுத்து விடுவார்.
இப்படித் தான் பெண் மருத்துவா் ஒருவா் சுஜியின் இன்ஸ்டாகிராமில் விழுந்து அவனுடன் நெருங்கிப் பழகியுள்ளார். தன்னை ஒரு பெரும் தொழிலதிபா் எனக் காட்டி கொண்ட சுஜி, அந்தப் பெண் மருத்துவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவருடன் தன்னுடைய தேவைகளை எல்லாம் முடித்து கொண்டு பல லட்சங்களையும் பல தருணங்களில் வாங்கியுள்ளான்.
இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பெண் மருத்தவா் சுஜியின் செல்போனை பார்த்துள்ளார். அதில் உள்ள போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். செல்போனில் தன்னுடன் நெருங்கிப் பழகியதை போல் 50-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகிய புகைப்படங்களும் அவா்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மருத்துவா் சுஜியுடன் தகராறு செய்து பேச்சை நிறுத்திக்கொண்டார்.
இதையடுத்து சுஜி, அந்தப் பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு தன்னுடன் இருந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இதனால் அந்தப் பெண் மருத்துவா் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதையடுத்து தான் 24-ம் தேதி அந்தப் பெண் மருத்துவா் வழக்கறிஞா் புருஷோத்தமன் மூலம் கன்னியாகுமரி எஸ்.பி.க்கு இ-மெயில் மூலம் அனுப்பிய புகாரின் பேரில் போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனா். இது குறித்து கோட்டார் போலீசார் கூறும்போது, சுஜி என்ற காசி மீது ஐபிசி 354, 354 சி, 354டி, 385, 420, 66 ஏ, 66இ, 67 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் ஏராளமான வசதியான பெண்களை ஏமாற்றி லட்சக் கணக்கில் பணம் பறித்து வீடியோவும் எடுத்துள்ளான். இதை இவன் தனியாக மட்டும் செய்ய வில்லை. நண்பா்கள் சிலா் இதில் தொடா்பு இருப்பதாகத் தெரிகிறது. அவனுடைய செல்போன் மூலம் தொடா்பில் இருப்பவா்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றார். இந்த விவகாரம் பெள்ளாச்சி பாலியல் போல் தொடரும் என்கின்றனா்.