பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க மற்றும் லோக் ஜனசக்தி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 1995 ஆண்டு 1997ஆம் ஆண்டு வரை பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார்.
லாலு பிரசாத் யாதவின் ஆட்சி காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும், இது தொடர்பான வழக்கு குவாலியர் பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், இந்த வழக்கு விசாரணைக்கு லாலு பிரசாத் யாதவ் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு எதிராக நிரந்தர கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.