வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதே சமயம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (04.01.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே போன்று நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் (05.01.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் நகரின் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.