சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று (05-02-24) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை என்பது நாடு முழுவதும் இருக்கிறது. இருப்பினும், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறை கூடிய விரைவில் சரி செய்யப்படும். சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக ஆளுநர், முதல்வருடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு என்பது மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் நியமிக்கப்பட்டவர். அவரைக் குறைகூற விரும்பவில்லை. ஆளுநருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆளுநரைப் பொறுத்தவரை அரசியல் ரீதியான கருத்துகளை தவிர, நிர்வாக ரீதியான கருத்துகளை கூறினால் அதை ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 25 பொறியியல் கல்லூரிகள் மிகவும் மோசமாக இருப்பதால் அதை மூடக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. அவற்றை மூட வேண்டுமா? வேண்டாமா என்பதை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவு எடுக்கும். தேசிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.
மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பிட்ட பின், முதல்வர் தலைமையில் இரண்டும் ஒப்பிடப்பட்டு முடிவெடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தாலும் அரசின் முடிவே இறுதியானது” என்று கூறினார்.