நடைபெறவிருக்கும் இறுதிக்கட்டத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (29-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானாவில் இல்லவே இல்லை. கர்நாடகாவில் அவர்களுக்கு 50-50 வாய்ப்புகள் உள்ளது. மகாராஷ்டிராவில் அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அவர்கள் சண்டையிடுகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து 400 இடங்கள் கிடைக்கும்? நாடு முழுவதும் எங்களது நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. அவர்கள் களத்தை இழக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெறுகிறோம். அவர்களின் எண்ணிக்கை 200 தொகுதிகளைக் கூட தாண்டாது.
நான் வேலைக்காக அரசியலில் சேரவில்லை. நான் சிறுவயதில் இருந்தே மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு எனது பதவியை இழப்பேன் என்று அமித்ஷா கூறியுள்ளார். அது உண்மை தான். அவரது பணி விரைவில் காலியாகிவிடும். என் வேலைகள் முடியப் போகிறது. அவர்களது பதவிகள் அனைத்தும் எங்களுக்கு வரும். விரக்தியாலும், போதைப் பழக்கத்தாலும் இளைஞர்கள் சீரழிகின்றனர். இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
போதைக்கு பயந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் அனைவரும் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மோடி எங்களின் தேர்தல் அறிக்கையை பார்க்கவோ, படிக்கவோ இல்லை. அவருக்கு விளக்கமளிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஒருவரை அனுப்புவோம்” என்று கூறினார்.