டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதைத் தொடர்ந்து, லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று (செப். 24) முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் தாறுமாறாக எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உற்பத்தித்திறன், உள்ளூர் சந்தை தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே பதினைந்து நாள்¢களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில், தினமும் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் புதிய முறையை அமலுக்குக் கொண்டு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தைவிட இப்போது 40 முதல் 35 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதற்கேற்றவாறு குறையவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
தற்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.79 முதல் ரூ.81 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.87க்கும் மேல் விற்பனை ஆகிறது.
இதன் எதிரொலியாக லாரிகளில் சரக்குகளை ஏற்றிச்செல்ல நிர்ணயிக்கப்படும் புக்கிங் கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் இன்று (செப். 24, 2018) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ராஜவடிவேல் கூறியது:
டீசல் விலையேற்றம் காரணமாக லாரி சரக்கு புக்கிங் கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறோம். இதுநாள் வரை சேலத்தில் இருந்து சென்னைக்கு சரக்குகளை கொண்டு செல்ல ரூ.8500 லாரி வாடகை கொடுத்து வந்தனர். தற்போது அந்த தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதேபோல் சேலத்தில் இருந்து திருச்சி, கோவை ஆகிய ஊர்களுக்குச் செல்ல ரூ.6000ல் இருந்து ரூ.7500 ஆகவும் புக்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. வட மாநிலங்களுக்கு சரக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகை ரூ.8000 முதல் ரூ.25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
டெல்லி செல்ல ரூ.1.15 லட்சம் வாடகை கட்டணம் பெற்று வந்தோம். இனிமேல் ரூ.1.40 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும். சரக்கு கொண்டு செல்லப்படும் தூரம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு ராஜவடிவேல் கூறினார்.
லாரி சரக்கு கட்டணம் உயர்வு காரணமாக, அனைத்து மளிகை, காய்கறி பொருள்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.