நேபாளம் என்பது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். அங்கு போய்விட்டால், தமிழக போலீஸாரால் தன்னை நெருங்க முடியாது என்று திட்டமிட்டு நேபாளத்துக்கு ஓடினான் வங்கிக் கொள்ளையன் சபீல் லால் சந்த். அவன் இன்டர்போல் போலீசாரால் நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில், விருகம்பாக்கம் இன்டியன் ஓவர்சீஸ் வங்கியில் இரண்டு லாக்கர் கதவுகளை கேஸ் கட்டரால் உடைத்து, ரூ.32 லட்சம் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து தலைமறைவானான், அங்கு துப்புரவு பராமரிப்பு தொழிலாளியாக வேலை பார்த்துவந்த சபீல் லால் சந்த். காவல்துறையினரின் விசாரணையில், சபீல் லால் சந்தும் அவனுடைய மகன் திலூவும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் நேபாளத்துக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகித்த தமிழ்நாடு காவல்துறை, தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் கிரி உள்ளிட்ட தனிப்படையினரை அனுப்பியது. அதே நேரத்தில் இன்டர்போல் போலீசாரின் உதவியையும் நாடியது.
மேலும், சென்னையில் பிடிபட்ட ஹிலாராம் மற்றும் ஹர்பகதூரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ரமேஷ் என்ற கார் டிரைவரைக் கைது செய்தனர். ரமேஷ் உட்பட 6 பேர் சேர்ந்து வங்கிக்கொள்ளையை நடத்தியதை விசாரணை மூலம் கண்டறிந்தனர்.
சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் வேண்டுகோளை ஏற்று, பழைய குற்றவாளிகளின் பட்டியலைச் சரிபார்த்த இன்டர்போல் போலீசாரிடம் சிக்கியிருக்கிறான் சபீல் லால் சந்த். கைதான அவனை சென்னைக்குக் கொண்டு வருகின்றனர். கொள்ளை நடத்திய மீதி நால்வர் இன்னும் பிடிபடாத நிலையில், இன்டியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சிலரையும், தங்களின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருக்கிறது தமிழக காவல்துறை.
வங்கிக் கொள்ளையர்களைப் பிடிப்பதில் தீரத்துடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறையைப் பாராட்ட வேண்டும்.