Skip to main content

காங்கிரசுக்கு நஷ்டமும் இல்லை... பாஜகவுக்கு லாபமும் ஏற்படப் போவதில்லை... கே.எஸ்.அழகிரி 

Published on 12/10/2020 | Edited on 12/10/2020
ddd

 

"குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. அதேபோல, பா.ஜ.க.வில் சேருவதனால் எந்த லாபமும் அந்தக் கட்சிக்கு ஏற்படப் போவதில்லை" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருமதி. குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாகக் கடந்த சில நாட்களாக வதந்தி பரவியிருந்தன. இன்று அது உறுதி செய்யப்பட்டு சேரப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 2014 மக்களவை தேர்தலுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த திருமதி. குஷ்பூ அவர்களுக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பு  தரப்பட்டு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக அவரது கட்சி ஈடுபாடு மிக மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது, இனி நான் மிகுந்த ஈடுபாட்டோடு கட்சிப் பணியாற்றுவதாக உறுதி கூறினார். 

 

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வேளாண் சட்டங்களை எதிர்த்து திரு. தினேஷ் குண்டுராவ்  பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திருமதி. குஷ்பூ அவர்களும் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு பெரம்பூரில் நடைபெற்ற தலித் பெண் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

kushboo

 

மேலும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தலைநகர் தில்லிக்கு பயணமான போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமதி. குஷ்பூ, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்  திரு. கே.சி. வேணுகோபால் அவர்களைச் சந்திக்கப் போவதாகக் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சியில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பா.ஜ.க.வில் சேரப் போவதாக அந்த கட்சியினர் ரூபாய் 2 வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். பா.ஜ.க.வில் சேருவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என மறுத்தார். ஐந்து நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.வை விமர்சனம் செய்த திருமதி. குஷ்பூ, ஆறாவது நாள் பா.ஜ.க.வில் சேருகிற முடிவை ஏன் எடுத்தார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

 

Ad

 

திருமதி. குஷ்பூ சுந்தர் அவர்கள் பா.ஜ.க.வில் சேருவதற்கு அவரது கணவர் திரு. சுந்தர் சி. நிர்ப்பந்தம் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த திருமதி. குஷ்பூ மூளை சலவை செய்யப்பட்டு, இன்று அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார். இதன்மூலம் நீண்டகாலமாக அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை பா.ஜ.க.விடம் அடகு வைத்திருக்கிறார். 

 

திருமதி. குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியினர் மேடை அமைத்தால் அதில் பேசிவிட்டு விளம்பரம் பெறக் கூடியவர். காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற பணியில் பெரியளவில் ஈடுபாடு காட்டாதவர். அவர் கட்சியையை விட்டு விலகுவதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. அதேபோல, பா.ஜ.க.வில் சேருவதனால் எந்த லாபமும் அந்த கட்சிக்கு ஏற்படப் போவதில்லை. சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு குஷ்பூவால் தீனி போட முடியும். அதைத் தவிர எந்த வகையிலும், யாருக்கும் எந்தப் பயனும் தரப் போவதில்லை'' என்று கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்