"அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே.!" என பாரதியாரின் நினைவு கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டியதையும், அந்த செய்தி 1982ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழக அரசின் இதழான தமிழரசு-வில் வெளியானதையும் அப்பட்டமாக மறுத்து, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆணையை கிடப்பில் போட்டுள்ளது ஆளும் அதிமுக அரசு.
" 1981ம் ஆண்டு மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவினை டிசம்பர் 11, 12 மற்றும் 13 தேதிகளில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் எட்டையபுரத்தில் நடத்தியது தமிழக அரசு. மணிமண்டபம் அருகேப் போடப்பட்ட மேடையில் கர்நாடக முதல்வர் குண்டுராவ், கேரள கவர்னர் ஜோதி வெங்கடாசலம் உட்பட நாட்டின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்க, பாரதியின் 100 ஆண்டு விழாவில், பாரதி பெயரில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி, நூற்பாலை மற்றும் பாரதியின் விடுதலைப் போராட்டத்தினையும், தேசப்பக்தியையும் போற்றும் விதமாக 10 ஏக்கர் அளவில் பாரதி நினைவு கலையரங்கம் கட்டப்படும் சில முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டதோடு அதற்கான அடிக்கல்லையும் கலந்து கொண்ட விருந்தினர்களை வைத்து துவக்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.. இதில் கேரள கவர்னர் ஜோதி வெங்கடாசலம் பாரதி நினைவு கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். மணிமண்டபத்தின் பின்புறமுள்ள இடமே கலையரங்கம் கட்டுவதற்கான இடமும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தமிழகரசின் இதழான தமிழரசுவிலும் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பின் இந்த கலையரங்கத்திற்கான வடிவமைப்பு ஓவியத்தை சிறப்பாக யார் தருகிறார்களோ.? அவர்களுக்குப் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டு வரைபட தேடுதலும் நடைபெற்றதோடு, இடமும் அரசால் கையகப்படுத்தப்பட்டது. கலையரங்கிற்கான ஓவியமோ தமிழரசு இதழின் அட்டைப்படமாகவும் 1985ம் ஆண்டு வெளிவந்தது. எம்.ஜி.ஆர்.உடல் நலக்குறைவிற்கு பின் அத்திட்டம் அம்போவானது. ஏறக்குறைய 35 வருஷமாகப் போராடுறேன். இன்னும் ஒன்றும் நடக்கவில்லை. ஆளும் அரசிற்கு எழுதிப் பார்த்துவிட்டேன். எழுதி கை ஒடிந்தது தான் மிச்சம். தகவலறியும் உரிமை சட்டத்தில் கேட்டேன். அப்படி எதுவும் அரசாணையே இல்லை. அது தான் இது என கல்கி டீம் கட்டிய மணிமண்டபத்தையே கலையரங்கம் என்கிறது செய்தித்துறை. எம்.ஜி.ஆரின் ஆணைக்கு மதிப்பில்லை போலும். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் வாழும் காலத்திலேயே நினைவு கலையரங்கம் வந்தால் நன்றாக இருக்கும்." என்கிறார் பாரதி ஆய்வாளரும், எழுத்தாளுருமான இளசை மணியன்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரத்தில் ஆண்டுதோறும் தமிழிசை விழா நடைபெறுவது இன்றும் வழக்கமான ஒன்று. 1946ம் வருடம் கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி.சதாசிவம், ராஜாஜி மற்றும் டி.கே.சி.,இவர்களைக் கொண்டு நடந்த தமிழிசை விழாவினில் எட்டையபுர பள்ளிக்கூட ஆசிரியர் நாராயணன் தலைமையில், " நாட்டின் விடுதலை வேள்விக்கு வித்திட்ட மகாகவி பாரதியின் மகத்தான சேவையினைப் பாராட்டும் விதமாகவும், அதே வேளையில் வளரும் தலைமுறையினருக்கு பாரதியின் வரலாறு தெரிய வேண்டும். இதற்காக இங்கு ஒரு நினைவு மணிமண்டபம் கட்டினால் மிகப் பெரிய வரபிரச்சாதமாக இருக்கும்." என மேடையில் வீற்றிருந்தோர்களிடம் உள்ளூர் மக்கள் கோரிக்கை வைக்க உடனே நிறைவேற்றுவோம் என மார்தட்டிய கல்கி டீம், " பாரதிக்கு மணி மண்டபக் கோவில் கட்டவுள்ளோம். நிதி தாரீர்.!!" என வேண்டுகோளையும் பொதுமக்களிடம் வைக்க, உள் நாட்டில் மட்டுமல்லாது கடல் தாண்டியும் நிதிகுவிந்த வேளையில், எட்டையபுர ஜமீன் இடத்தினைக் கொடுக்க, மாட்டுவண்டி கட்டிக் கொண்டு செங்கற்களையும், மணலையும் கொண்டு வந்து பொதுமக்களும் கலந்து கொள்ள 'சிதாலே' எனும் அற்புத கட்டிடக்கலைஞன் வரைந்து கொடுத்ததின் படி மகத்தான கவிஞன் பாரதிக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு 1947ம் வருடம் அக்டோபர் மாதம் 13ம் தேதியன்று ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடலுடன் தொடங்கிய பாரதி மணிமண்டப திறப்பு விழா, ஜீவா-வின் பாரதி பாடல்கள் பற்றிய ஆய்வுரையில் மெய்சிலிர்த்துள்ளது. அதே வேளையில் தங்களது பத்திரிகையில் புத்தக மதிப்புரைக்காக வந்த அனைத்து நூல்களையும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தானமாக கொடுத்து உதவினர் இந்து மற்றும் சுதேசமித்திரன் நாளிதழ்கள் இது தான் எட்டையபுரத்தில் இருக்கும் மகாகவி பாரதியின் நினைவு மண்டபத்தின் முந்தைய வரலாறு.
அயன்வடமலாபுரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் வரதராஜனோ., " எங்களுக்கு அரசியல் உணர்வையும், அடக்குமுறைக்கு எதிரான உணர்வையும் ஊட்டியதே பாரதி பிறந்த இந்த மண் தான். அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின். அரசாணையை எந்தளவிற்கு மதிக்கிறார்கள்..? என்பதற்கு பாரதி நினைவு கலையரங்க விவகாரத்தைப் பார்த்தாலே தெரியும். அவர் உருவாக்கிய கட்சியில் இருந்து கொண்டு ஆட்சி செய்பவர்கள் சிறிது கருணைப் பார்வைப் பார்த்தாவது பாரதியின் கலையரங்கம் உருவாகும். அத்தோடு இல்லாமல் எம்.ஜி.ஆர்.வாக்கிற்கு அர்த்தம் கிடைக்கும். இந்த அரசு இதையாவது செய்ய வேண்டுமென்பது இங்குள்ள அனைவரின் ஆசை.. இதனை வலியுறுத்தி மதிமுக தலைவர் வை.கோ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்." என்றார் அவர்.