நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரிடம் இருந்து 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் ஆய்வின் முடிவில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் உதகை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.