கர்நாடகாவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில், இன்று காலை சட்டசபை கூடியது.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து, இன்று மாலை 4 மணி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான போபையா கர்நாடக சட்டசபையின் தற்காலிகசபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரது இந்த நியமனம் சட்டவிரோதமானது என காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்திய வேளையில், இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டசபை கூடியது.
இன்று கூடிய சட்டசபையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் வருகை புரிந்துள்ளனர். முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இருவரும் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் போபையா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். அதேபோல், காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன்படி, இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பினை நேரலையில் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.