சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ்களாக வந்து மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிடுகின்றன. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்து என்ற வாட்ஸ் அப் வதந்தி பிரேக்கிங் நியூஸ்களாக வந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதில் உண்மையில்லை என்று பின்னர் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தது. அப்படித்தான், மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆனந்த ரங்கநாதன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
கர்நாடகத்தில் குறிப்பாக மைசூரில் தயாராகும் மைசூர்பாக், உலகம் முழுவதும் புகழ்பெற்றது. இந்த மைசூர்பாகுவிற்காக புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பதிவிட்ட அவர் மேலும், மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் மைசூர்பாக் வழங்குவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டார். இதை செய்தி நிறுவனங்கள் பரபரப்பாக வெளியிட்டன. ஒரு செய்தி நிறுவனம் இது தொடர்பான விவாதத்தையும் நடத்தியது. மைசூர் பாகு உருவான வரலாற்றையும் ஒளிபரப்பாகி மேலும் மேலும் பரபரப்பை ஏற்படுத்திவந்தது. இந்த விவகாரத்தால் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு உண்டானது.
ஒருங்கிணைந்த கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ், ’’மைசூர்பாகு எங்களுடையது என கொண்டாடும் உரிமை தமிழகத்திற்கு இல்லை. காவிரி, மேகதாதுவில் அமைதி காத்தது போல், மைசூர் பாகு விஷயத்தில் இருக்க மாட்டோம். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மைசூர்பாக்கை கொண்டு செல்ல முடியாத வகையில் தடுப்போம். அப்படி மீறி கொண்டு செல்லப்பட்டால் மாநில எல்லையில் மைசூர்பாக்கை தடுத்து நாங்களே சாப்பிட்டு விடுவோம்’’ என எச்சரித்தார்.
வாட்டாள் நாகராஜின் எச்சரிக்கைக்கு பின்னர் தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் அதிகரித்தது. நல்லகாலம்....கலவரம் ஏற்படுவதற்குள் மைசூர் பாக் விவகாரம் வதந்தி என்று தெரிந்துவிட்டது.