ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ளது காளிங்கராயன் அணைக்கட்டு. பவானி சாகர் அணையிலிருந்து வெளியேறும் நீர் பவானி ஆறாக வந்து பவானி கூடுதுறையில் காவிரியுடன் கலக்கிறது. அந்த இடத்தில் சுமார் 750 வருடங்களுக்கு முன்பு பவானி ஆற்றை தடுத்து அணைக் கட்டினார் காளிங்கராயன். அந்த அணையிலிருந்து சுமார் 50 கி.மி தூரத்திற்கு வாய்க்கால் வெட்டி ஈரோடு மொடக்குறிச்சி, கொடுங்குடி வரை வாய்க்காலை கொண்டு சென்றார் காளிங்கராயன்.
பிறகு அந்த வாய்க்காலுக்கு காளிங்கராயன் பெயர் வந்தது. இந்த பாசான பரப்பில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்கிறார்கள் விவசாயிகள். 750 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்கால் வெட்டிய காளிங்கராயனுக்கு பவானி அணைக்கட்டில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக பல தரப்பினர் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அணைக்கட்டில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அங்கு காளிங்கராயன் திரு உருவ சிலையும் நிறுவப்பட்டு வருகிற 13ம் தேதி மணிமண்டபத்தையும், சிலையையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், அமைக்கப்பட்டுள்ள காளிங்கராயன் சிலை அவரது தோற்றத்தில் இல்லை என்றும் காளிங்கராயன் கம்பீரமான தோற்றத்தில் இருப்பார் என்றும் ஆனால் இந்த சிலையில் அவரது தோற்றமே மாறி கம்பீரம் இல்லாமல் இருக்கிறது. ஆகவே அவரது சிலையில் உள்ள முகத்தோற்றத்தை மாற்றிவிட்டு தான் சிலையை திறக்க வேண்டும் இல்லையேல் முதலமைச்சர் எடப்பாடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நாங்கள் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என கொங்கு நாடு மக்கள் கட்சியும், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை அமைப்பும் அறிவித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் தான். இருப்பினும் அவரது சமூகமே அவருக்கு எதிராக சிலை விவகாரத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on 11/05/2018 | Edited on 11/05/2018