டிவிட்டரில் தனது உதவியாளர் பதிவு செய்து விட்டதாக எச்.ராஜா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
எச்.ராஜா பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது. டிவிட்டரில் தனது உதவியாளர் பதிவு செய்து விட்டதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவரது மனமும் புண்பட்டுள்ளது. எனவே எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியாக இருப்பவர் தந்தை பெரியார். அவர் விதித்த பகுத்தறிவு கொள்கையால் தான் இன்று சாதாரண ஆட்கள் கூட முதலமைச்சராக, அமைச்சர்களாக பொதுவாழ்க்கையில் இடம்பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேல்தட்டு மக்களுக்கு இணையாக தமிழக மக்களை தட்டி எழுப்பி ஒரு மிகப்பெரிய சமூதாய புரட்சியை செய்தவர் தான் தந்தை பெரியார். அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதை ஏற்கவே முடியாது.
எச்.ராஜா தானே பல்டி அடித்து தான் அந்தப் பதிவை போடவில்லை என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதன் உண்மைத்தன்மை என்ன என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். துணிச்சலான கருத்துகளை சொல்லக்கூடியவர் தந்தை பெரியார். அவர் எந்த கருத்தை கூறினாலும் தமிழ்ச்சமுதாயம் வளர்வதற்காகவே இருக்கும் என்று அவர் கூறினார்.