Skip to main content

’அடிச்சு கூட கேப்பாங்க... அப்போதும் அரசியல் பேச மாட்டேன்’ - வடிவேலாக மாறிய அமைச்சர் செங்கோட்டையன்

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
sen


பள்ளி கல்வித்துறை அமைச்சரும் அ.தி.மு.க.வின் சீனியருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சில பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

 

 அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பல நலத்திட்டங்களை தமிழகத்தில் உருவாக்கி வருகின்றார்கள். அதன்படி  சுற்றுச்சூழல்துறையில் பல  மாற்றங்கள்  உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு, பாலிதின் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,  இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாற உள்ளது..பாலிதீன் பயன்படுத்துவதில்லை என்பது ஜனவரி மாதம் முதல் கட்டாயப்படுத்தப்படும். 

 


நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் குப்பைகளைச் சேகரித்து, அதை சுத்தப்படுத்தி, அதிலே இருக்கிற நச்சுத்தன்மைகளைப் போக்கி, சிறப்பான முறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
பள்ளிக்கல்வித்துறையில்  பல்வேறு மாற்றங்கள் இன்று உருவாகி வருகின்றன. நவம்பர் மாத இறுதிக்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. ஒன்றிரிலிருந்து ஐந்து வரை, ஆறிலிருந்து எட்டுவரையிலான வகுப்புவரை சீருடைகளை மாற்றியமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வருகின்ற ஆண்டில் நான்கு சீருடைகளை அரசு மாணவர்களுக்கு வழங்கும். 
ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் கணினி மூலமாக ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பறையும் கணினிமயமாக்கப்படும். இணையதள வசதி செய்து தரப்படும். அதேபோல் யு டியூப் மூலம் பாடத்திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக, பணிகள் ஒருவாரம் முன்பு தொடங்கப்பட்டுள்ளது. 

 


ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் சந்தேகம் எதுவாக இருந்தாலும், கேட்டுத் தெரிந்து கொள்ளுமளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தங்களது செல்போன் மூலம் டவுன்லோடு செய்து விட்டு, வீட்டிலே சென்று படிப்பதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதற்கட்டமாக இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.   அடல் லேப் எனப்படும் நவீன அறிவியல்  ஆய்வகங்கள் 670 இடங்களில் அமைக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்த மாத இறுதிக்குள் சைக்கிள் வழங்கப்படும்.

 


மழை காலங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருவது குறித்து ஆராய்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆங்காங்கே இருக்கும் நிலைகளுக்கு ஏற்ப, மழையின் தன்மைக்கு ஏற்ப, விடுமுறை விடுவதும், பள்ளியைத் திறப்பது குறித்தும் முடிவு எடுப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள். வேறு இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படும் என்றால் அதனை பள்ளிக்கல்வித்துறை சீரமைக்கும். இந்த மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் நியமிக்கப்படுவார்கள்" என்று கூறிய அவரிடம் செய்தியாளர்கள் துறை தகவல்கள் போதும் அரசியலுக்கு வாங்க என்று கூறி,  ‘துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்தார் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளது’ குறித்து கேட்டபோது, அரசியல் கேள்வி வேண்டாமுங்க... என்னைப் பொறுத்தவரை அரசியல் கருத்துகளைச் சொல்வதில்லை என்று முன்பே முடிவெடுத்து விட்டேன் . துணைமுதல்வர் குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலே சொல்ல முடியாது’ என்றார்.


 
அருகே இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், வடிவேல் படத்துல ஒரு காட்சி வருமே உங்களுக்கு ஞாபகம் இருக்குதா என்றவர் அந்த காட்சியில் வரும் வசனம் "அடிச்சு கூட கேப்பாங்க அப்ப கூட சொல்லக் கூடாது" என்பது தான்.  அப்படி நீங்க அடிச்சு கேட்டாலும் அண்ணன் வாயிலிருந்து அரசியல் வரவே வராது. மந்திரிச்சு விட்டபொம்மை மாதிரி தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் , ஸ்மாட் வகுப்பு, சிறப்பு வகுப்புனு தான் பேசுவார். ஏதோ ஒரு பயத்துலயே அண்ணன் செங்கோட்டையன் இயங்கி வருகிறார்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்