மொபைல் எண், வங்கிக்கணக்கு என அனைத்தையும் ஆதாரோடு இணைப்பதற்கான காலக்கெடுவினை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆதாரை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. தொடர்ந்து வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் எண், மானியங்கள் என அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடுவாக வருகிற மார்ச் 31ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வங்கிக்கணக்கு, தட்கல் பாஸ்போர்ட் மற்றும் மொபைல் எண்களை அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கும் வரை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு அரசியலமைப்புச் சட்டம் 7ன் படி எந்த மாற்றமும் இல்லை (வருகிற மார்ச் 31, 2018) என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.