காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உயர்நீதிமன்ற கொடுத்த 6 வார காலக்கெடு இன்று மாலை 6 மணியுடன் (29.3.2018) முடிந்தது.
முன்னதாக இன்று காலையில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதா? அல்லது மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கே சென்று உத்தரவை அமல்படுத்தக்கோர மனு செய்வதா?என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கெடு முடிந்ததை அடுத்து இன்று மாலையின் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் காவிரி வாரியத்தில் அடுத்த கட்ட நட வடிக்கை குறித்து தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக மக்கள் நம்பி காத்திருந்தனர். நம்பியிருந்த மக்கள் இப்போது கொந்தளித்து போய் இருக்கின்றனர். தமிழக அரசு நாளை மறுதினம் சனிக்கிழமை அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமா என்றாவது மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், ’காவிரி விவகாரத்தில் எந்த முடிவு என்றாலும் முதல்வர் முக்கிய முடிவை அறிவிப்பார்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாததால் மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழக அரசு அதிரடியாக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே தமிழர்களின் தலையாய எதிர்பார்ப்பாக இருக்கிறது.