
கரோனா தொற்று காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
61 வயதான அன்பழகன், கடந்த 2ம் தேதியன்று கரோனா மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இதனையடுத்து, ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளையொட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 2ம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.