வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து செலவினை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி அறிவித்திருப்பது அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் இப்படி நிலைப்பாடு எடுக்கும் என உணராத மத்திய-மாநில அரசுகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றன!
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும் மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை. பொது போக்குவரத்தை திறந்து விட்டால், கரோனா வைரஸ் பரவலுக்கு அதுவே ஒரு காரணமாக மாறலாம் என்கிற மருத்துவத்துறையினரின் யோசனைகளை அரசுகள் ஏற்பதால் பொதுபோக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்கிறது.
அதேசமயம், வெளி மாநில தொழிலாளர்களின் உணவு பாதுகாப்புக்கும், தங்கும் வசதிகளும் அந்தந்த மாநில அரசுகள் கவனித்துக்கொள்ளும் என அறிவிப்பு செய்திருந்தாலும் அதனை முழுமையாக செயல்படுத்த முடியாமல் தடுமாறுகின்றன. இந்த நிலையில், கையில் பணமும் பசிக்கு உணவும் கிடைக்காததால் தங்களை தங்களது சொந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைக்குமாறு பல இடங்களில் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர் வெளிமாநில தொழிலாளர்கள். இதற்கிடையே, தற்போது ஊடரங்கில் பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசாங்கங்கள் முடிவு செய்திருப்பதாகவும், பயணத்திற்குரிய பணத்தை தொழிலாளர்கள் கொடுக்க வேண்டும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர்களின் ஊர்களுக்கு செல்லும் பயணத்திற்குரிய கட்டண செலவுகளை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அறிவித்திருக்கிறார். கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் சிவக்குமார், வெளிமாநிலத்திலுள்ள கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளர்களை கர்நாடகாவுக்கு அழைத்து வர 1 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கு கொடுத்திருக்கிறார். இந்த யோசனையை அனைத்து மாநிலத்திலும் கொண்டு வர வேண்டியதுதான் தொழிலாளர்களின் பயணக்கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என அறிவித்ததுடன், ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு உத்தரவும் போட்டுள்ளார் சோனியா .
சோனியாவின் உத்தரவை ஏற்று காங்கிரஸ் அறக்கட்டளையின் நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை தமிழக அரசிடம் வழங்குவதற்கான முடிவை எடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது குறித்து அறிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வர 1 கோடி ரூபாய் தமிழக முதல்வரிடம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்த பணத்தை தமிழக அரசிடம் முறைப்படி வழங்குவார் என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி முடிவு ஆளும் கட்சிகளை அதிர வைத்திருக்கிறது!