பா.ஜ.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் என்று சொல்லப்படும் பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரங்களில் வாக்குவங்கியைக் குறிவைத்து சொல்லும் பொய்களுக்கு எல்லையில்லாமல் போய்விட்டது என சாமான்யர்களும் சொல்லும் நிலை வந்துவிட்டது. குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தன்னைக் கொல்ல பாகிஸ்தான் சதி இருக்கிறது எனச் சொல்லிவிட்டு, பின் அதைப்பற்றி வாயே திறக்காமல் இருந்தவர் பிரதமர் மோடி.
நடக்கவிருக்கும் கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதேபோல பல இடங்களில், தனது வாய்க்கு வந்தவ இராணுவத் தளபதி திம்மய்யாவை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால், 1948ஆம் ஆண்டு கே.எம்.கரியப்பாதான் இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்தார் என்ற உண்மையை பலரும் போட்டுடைக்க, அதைப்பற்றி மோடி உட்பட யாருமே வாய்திறக்கவில்லை.
இந்நிலையில், மே 9ஆம் தேதி கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பகத்சிங், படுகேஷ்வர் தத் மற்றும் வீர் சவார்கர் ஆகியோரை எந்த காங்கிரஸ் தலைவர்களும் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால், ஊழல் செய்து சிறையில் இருப்பவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சென்று பார்க்கத் தவறியதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மோடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையானதுதானா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அந்தக் கேள்விக்கு முன்னாள் பிரதமர் நேருவே தனது சுயசரிதையில் பதிலளித்திருக்கிறார். 1929ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குண்டுவீசிய வழக்கில் பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ‘லாகூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகத்சிங், ஜதீந்திரநாத் தாஸ் உள்ளிட்ட பலரை சிறைக்கு நேரில் சென்று சந்தித்தேன். பகத்சிங்குடன் உரையாற்றினேன்’ என நேரு எழுதியிருக்கிறார்.
இதை உண்மையாக்கும் விதமாக ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் வெளிவந்த தி ட்ரிப்யூன் நாளிதழும் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் ஜவஹர்லால் நேரு மற்றும் கோபி சந்த் ஆகியோர் லாகூர் சிறைக்கு சென்று பகத்சிங் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று நிகழ்வுகளை சற்றும் தெரிந்துகொள்ளாமல், மேடையில் நிற்கும்போது வாய்க்கு வருவதைப் பேசிவிடுகிறார் மோடி. சின்னச்சின்ன வரலாற்று நிகழ்வுகள் கூட தெரியாதவராக அவர் இருக்கிறார். மோடியின் இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை தற்செயலானவை என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மோடியிடம் இந்தமுறையும் பதில் கிடையாது.