கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியில் வியாழக்கிழமை பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. 3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.
இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டியபோது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் குதி என்று கூறியுள்ளார்.
ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்க வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.
காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு இளம் உயிரை நாம் இழந்துவிட்டோம். இது எதிர்பாராத ஒன்று. பயிற்சியில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். எனினும், பயிற்சி அளித்தவர் என்டிஎம்டிவை சேர்ந்தவர் இல்லை, இந்த சம்பவத்திற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என விளக்கம் அளித்துள்ளது.
சம்பவம் குறித்து கல்லூரியின் முதல்வர் விஜயலெஷ்மி கூறும்போது, கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் அளித்த அறிவுறுத்தல்களை மாணவி லோகேஸ்வரி சரியாக பின்பற்றாததாலே அவர் உயிரிழக்க நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த கலைமகள் கல்லூரி அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு போட்டியிட்டபோது, வேட்புமனு தாக்கல் செய்தபோது தனக்கு கல்லூரி இருப்பதை அதில் குறிபிட்டுள்ளார்.