ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அதன்படி கடந்த 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் இன்று (05.02.2024) சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் கூடியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக 29 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர்.