நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் வலைத்தளத்தில், “கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் முழுவதும் பிரச்சாரம் செய்தபோது விளையாட்டு மீது ஆழ்ந்த ஆர்வமுள்ள பல இளைஞர்களை சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகள் மற்றும் குறிப்பாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோவை இளைஞர்களின் ஆர்வம் ஈடு இணையற்றது. இது 3 தமிழ்நாடு பிரிமியர் லீக் அணிகளின் (TNPL) உரிமையாளர்களின் தாயகமாகும். மேலும் வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் தமிழகத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
எனவே கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இளைஞர்களின் திறமைகள் வெளிக்கொணருவதற்கும், தமிழ்நாட்டில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உண்மையான தேவையைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூரில் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு வசதிகள் கொண்ட சர்வதேச அளவிலான கிரிக்கெட் ஸ்டேடியத்தை நிறுவ வேண்டும் என முதலமைச்சரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இளைஞர்களின் வளமான விளையாட்டு திறமைகளை வளர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன், கோயம்புத்தூரில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். இந்த மைதானம் சென்னையின் சேப்பாக்கம் எம்,.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச மற்றும் தரமான கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும். அரசும் விளையாட்டுத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.