தடையை மீறி சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணி தொடங்கி நடந்து வருகிறது.சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணி தொடங்கியது. இதில் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன், திமுகவின் வி.பி துரைசாமி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். சட்டமன்றத்தை முற்றுகையிட மார்ச் 11- ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் பேரணி நடந்து வருகிறது.
பேரணி நடைபெறுவதையொட்டி சென்னை சட்டமன்ற பகுதியில் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று தற்காலிக கட்டுப்பாட்டு அறை மற்றும் கேமராக்களின் உதவியுடன் போராட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. தடையை மீறி பேரணியில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்துவோம்; மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.