கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் டெல்லியில் நேற்று (24/02/2020) நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையேயும் வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதேபோல யமுனா விஹார் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நடந்த வன்முறையில் தலைமை காவலர் உள்பட 4 பேர் பலியானதாகவும், வன்முறையின் போது வீடுகள், கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நிகழ்ந்த வன்முறை கண்டனத்துக்குரியது. டெல்லியில் அமைதி நிலவ வேண்டும். காந்தியடிகளின் மண்ணில் வன்முறைக்கு இடமில்லை" என்று கூறியுள்ளார்.
இதனிடையே டெல்லி மாநில அமைச்சர் கோபால் ராய், துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.