Skip to main content

“பயணிகளுக்குப் பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன” - அமைச்சர் சிவசங்கர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Buses are running without harm to passengers Minister Sivashankar

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வைத்த இரண்டு கோரிக்கைகளில் நடைமுறையில் இருக்கிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிரைவர், ஓட்டுநர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். அதில் எழுத்துத் தேர்வு முடிவுற்று நேர்காணலும் தொடங்கிவிட்டது. இம்மாத இறுதியில் நேர்காணல் முடிவுற்று பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அதேபோல பணிக் காலத்தில் ஓட்டுநர், நடத்துநர் உயிரிழந்தால் அவர்களுக்குப் பணி வழங்குவதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடக்கவில்லை. திமுக ஆட்சி அமைத்த பிறகே வாரிசுகளுக்குக் முதல்வரின் முன்னிலையில் கருணை அடிப்படையில் சுமார் 800 மேற்பட்டோருக்கு கருணை பணி  அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை. ஆனால் பொது மக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க கூட்டமைப்பின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். தங்கள் அமைப்பு பலத்தை காட்டுவதற்காக போராட்டத்தை அறிவித்த கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போது அதனை கைவிட முடியாமல் தவிக்கின்றனர். அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த அதிமுக ஆட்சியில்தான் உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்