Skip to main content

தொடரும் தோல்விகள்..! எங்கே போனது மோடி அலை?

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

இடைத்தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரேயொரு ஆண்டு மட்டுமே இருக்கும் சூழலில், பா.ஜ.க.வின் இந்தப் பின்னடைவு 2014ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட மோடி அலை எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
 

Modi

 

மோடி பிரதமராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்தடுத்த தோல்விகளின் மூலம் பா.ஜ.க. மக்களவையில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. மொத்தம் 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை வெறும் 273 மட்டுமே. இந்நிலையில், இந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மற்றும் அவற்றில் பா.ஜ.க.வின் நிலை குறித்து பார்க்கலாம். 
 

2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 27 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் பா.ஜ.க. தான் போட்டியிட்ட 24 தொகுதிகளில், வெறும் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தன் கைவசம் இருந்த 13 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை இழந்திருக்கிறது. அதேசமயம், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட இதுவரை கைப்பற்ற முடியவில்லை. 
 

Modi

 

மேலும், பா.ஜ.க.வுக்கு 2018ஆம் ஆண்டு மிகவும் மோசமான தேர்தல் முடிவுகளையே தந்திருக்கிறது. அதாவது, இதுவரை பா.ஜ.க. தான் இழந்த 8 தொகுதிகளில் கோரக்பூர், புல்பூர், அஜ்மீர், ஆல்வார், கைரானா மற்றும் பந்த்ரா கோண்டியா ஆகியவற்றை இழந்தது இந்த ஆண்டில்தான். ஆனால், காங்கிரஸோ பா.ஜ.க.விடம் இருந்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் கணிசமான இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றன. 
 

ஆந்திராவில் கூட்டணிப் பிளவு, கர்நாடகாவில் தோல்வி என தென்னிந்திய நம்பிக்கை தகர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாநிலங்களிலும் தோல்வியை எதிர்கொண்டு வருகிறது பா.ஜ.க. இடைத்தேர்தல் தோல்வி என்பது பா.ஜ.க.வின் வியூகம் என்று சொல்வீர்களானால், பெரும்பான்மை இழப்பின் மூலம் சொந்த பிம்பம் நொறுக்கப்படுவதை அது விரும்புமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்தானே. இன்னும் ஒரே ஆண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பா.ஜ.க.வை எதிர்க்கின்றன. இப்போதே மோடி அலை தொலைந்துவிட்டதா? என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டு அதற்கான விடை கிடைத்துவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்