Skip to main content

'மேயர் தேர்தலில் தில்லுமுல்லு; பாஜக வெற்றி செல்லாது' - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'BJP victory invalid'-Supreme Court action verdict

அண்மையில் சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தவை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில், சண்டிகர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 30-01-24 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

30-01-24 அன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டியது. இந்நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.

தேர்தலை நடத்தும் விதம் இதுதானா? என சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேர்தல் என்ற பெயரில் அங்கு நடந்த செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதைப் பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம். தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து சண்டிகர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

நேற்று இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில், சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்தது உறுதி செய்யப்பட்டதால் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த ஒரு கட்சியையும் சாராத புதிய தேர்தல் அதிகாரியை நியமித்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மீண்டும் வாக்கு சீட்டுகளை எண்ணி முடித்து முடிவை உச்சநீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணைக்குப் பின், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. 'தனது அதிகார வரம்பை மீறித் தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார். நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது எனச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை' எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.