கலாம் பெயரில் சேவையில் அசத்தும் இளைஞர்!
கடலூர் மாவட்டம் ராமநத்தம் இளைஞர் மாயகிருஷ்ணன். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் நற்பணிமன்றம்அமைத்து சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதல் முதலில் அப்பகுதியில் உள்ள காந்தி நகர் நரிக்குறவ இன பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க விரும்பினார்.
அந்த பிள்ளைகளின் பெற்றோர்களிடம் போய் பேசியபோது, ஒத்துழைப்பில்லை. தொடர்ந்து பல நாட்கள் கல்வியின் முக்கியத்துவம், கலாம் அய்யாவின் பெருமைகளை, அவரது கருத்துக்களை எடுத்துச் சொல்லிய பிறகு சம்மதித்தார்கள். 25 பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார். அப்போது முதல் அந்த பிள்ளைகளுக்கு பாட புத்தகம், சீருடை, பை என வாங்கி கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.

இப்போது அதில் பலர் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பது மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. அதோடு கலாம் அய்யாவுக்கு இதனை காணிக்கையாக எண்ணுகிறேன். இதுமட்டுமல்ல எங்கள் பகுதியில் உள்ள 120க்கும் மேற்ப்பட்ட அரசு அலுவலங்கள், பள்ளி வளாகங்கள், கோயில் இடங்கள், ஏறிகள் குளக்கறைகள், நீதிமன்ற வளாகம், ஊர்ப் பொது இடங்கள், கிராம சாலையோரங்கள் என இதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்ந்து வருகின்றன.
இதை இல்லாமல் எழுத்தூர், தச்சூர், ஆத்தூர் என பல கிராமங்களில் உள்ள ஏரிக்கரை, குளக்கரைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட பனை விதைகள் புதைத்து அவை முளைத்து வளர்ந்து வருகின்றன. ஆதரவற்ற பள்ளி பிள்ளைகளுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி. நிலத்தடி நீர் மட்டும், பல மாவட்டங்களில் குறைந்து போய்விட்டது. வற்றி விட்டது. இதனால் குடிநீர்கேட்டு தினசரி, பல ஊர்களில் காலி குடங்களோடு போராடிய காட்சிகள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் மரங்களை காடுகளை வளர்ப்பதற்கு பதில் அழித்தனர். அதன் விளைவு மழை பெய்யவில்லை. இதனை பொதுமக்கள் உணர வேண்டும். மரங்களை வெட்டும் காட்சியினை நான் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வந்துவிடும். அந்த மரமே அழுவதை உணர்வேன். எனவே காடுகள் அழிந்தால் மேலும், மேலும் வறட்சிதான் வரும். மரங்களை உருவாக்கினால்தான் வரும் கால நமது சந்ததிகளுக்காகவது தண்ணீர் பஞ்சம் வராது.
நல்ல இயற்கை காத்துகிடக்கும் நோய் நொடி வராது. இப்படி மரம் வளர்ப்பதன் மூலம் மக்களுக்கு ஏகப்பட்ட நன்மை உள்ளதை பலரும் உணரவில்லை. மரம் வளர்ப்போம். மழை பெறுவோம் என்பது போன்ற விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதை மக்கள் பொருட்படுத்துவதில்லை.

எதற்க்கெடுத்தாலும் அரசாங்கமே செய்யும், செய்யட்டும் என்ற போக்கு மக்களிடம் உள்ளது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மால் முடிந்ததை நம் பகுதி பிள்ளைகளுக்கு செய்ய வேண்டும். மரக்கன்று நட்டு வளர்ப்பதை ஒவ்வொரு குடும்பத்தினரும், இளைஞர்களும் கடமையாக செய்ய வேண்டும். உதாரணமாக பல மரங்கள் மழை, புயலின்போது விழுந்தாலோஇ, சாய்ந்தாலோ அதை மீண்டும், அதே இடத்திலோ, மாற்று இடத்திலோ குழிதோண்டு நட்டு காப்பாற்ற முடியும். அப்படி சாய்ந்த அரசு, ஆலமரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் பிடுங்கி நட்டு காப்பாற்றினோம்.
அப்படிப்பட்ட மரங்களை இடைச்செருவாய், பாளையம், வாகையூர் ஆகிய ஊர்களில் செழிப்பாக உள்ளன. அதேபோல் கோயில்கள், கட்டிடங்களில் முளைக்கும் மரங்களைகூட வேரோடு பிடுங்கி மற்ற இடங்களில் நட்டு நன்றாக வளர்ந்து வருகின்றன.

இதில் சில வருத்தமான விசயங்களும் உள்ளன. என்னைப் போன்றவர்கள் சொந்த செலவில் கன்று நட்டு அதை பாதுகாக்க இரும்பு கூண்டு அமைத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றுகிறோம். இதை பார்க்கும் பலர் பிழைப்பற்ற ஆள் என்று எண்ணுகிறார்கள். ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. அதேபோல் இளைஞர்கள் இதுபோன்ற சேவைக்கு துணைவருவதற்கு கூச்சப்படுகின்றனர்.
அப்படி வரும் சிலர், சில நாட்களில் பின் வாங்குகிறார்கள். ஏளனம், கிண்டல் பேசுவது பற்றி கவலைப்படாமல் கலாம் அய்யா கனவை நனவாக்கி அக்கறை உள்ள பல நண்பர்களோடு எங்கள் பணி தொடர்கிறது. தொடரும் என்கிறார் மாயகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள்.
பணி சிறக்க வாழ்த்துவதோடு இவர்களைப்போன்று இளைஞர்கள் சேவை செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும். இப்படி செயல்படும் மாயகிருஷ்ணன் போன்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
எஸ்.பி.சேகர்.