கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், உப்புக்குறவர் சாதியினர் குற்றப்பரம்பரையில் சேர்க்கப்பட்டது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
" பிரிட்டிஷுக்கு ஆதரவாக நம் ஆட்கள் சிலர் பேசுகிறார்கள். ஒன்று, அவர்கள் வரலாற்றை அரைகுறையாக படித்தவர்களாக இருக்கும் அல்லது எல்லோரும் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக பேசுகிறார்கள், நாம் ஆதரவாக பேசுவோம் என்று பேசுபவர்களாக இருக்கும். பிரிட்டிஷ்காரன்தான் சாலை போட்டான், ரயில்வே அமைத்தான், கல்வி கொடுத்தான் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதையெல்லாம் அவன் ஏன் போட்டான் என்று தெரியுமா? நம் நாட்டில் இருந்த பொருட்களையெல்லாம் கடத்திக்கொண்டு செல்வதற்காகவும், எங்காவது கலகம் நடந்தால் உடனே அந்த இடத்தில் ஆர்மியை கொண்டு வந்து இறக்குவதற்காகவும் ரயில்வே ட்ராக் போட்டான்.
அவனைச் சுற்றி படித்த ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்ததால் பள்ளி, கல்லூரிகளை கட்டினான். வெளியே இருந்து பார்த்தால் இது சேவை மாதிரி இருக்கும். ஆனால், அவனுக்கான தேவை அதற்கு பின்னால் இருந்தது. இது உங்கள் வீட்டை பிடித்து அவன் மராமத்து வேலை செய்வது போன்றது. நம் வீட்டில் மராமத்து வேலை நடப்பதுபோல இருந்தாலும் அந்த வீட்டில் வாழப்போவதும் அவன்தான். நாம் வீட்டிற்கு வெளியேதான் நிற்கவேண்டும்.
நம் மக்களை எவ்வளவு நசுக்கினார்கள் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். 1882ஆம் ஆண்டு இந்திய உப்புச் சட்டம் என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. யார் வேண்டுமானாலும் உப்பு எடுக்கலாம், யார் வேண்டுமானாலும் உப்பு விற்கலாம் என்பதற்கு இந்தச் சட்டம் தடைபோட்டது. அந்தக் காலகட்டத்தில் உப்புக்குறவர்கள் என்று ஒரு சாதியினர் இருந்தனர். அவர்கள்தான் உப்பை வண்டியில் தள்ளிக்கொண்டு வந்து ஊரில் விற்பார்கள். உப்பு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதால் அதன் தேவையும் அதிகமாக இருந்தது. சந்தையில் அவர்களுக்கென்று தனியிடம்கூட ஒதுக்கப்பட்டது. நெல்லையும், சோளத்தையும் கொடுத்துவிட்டு பண்டமாற்றுமுறையில் உப்பை வாங்கிக்கொண்டு செல்வார்கள். இதை பார்த்த வெள்ளைக்காரன், உப்பில் இவ்வளவு வருமானம் வருமா, ஒரு இந்தியன் இத்தனை கிராம் உப்பு எடுத்துக்கொண்டால் நாடு முழுக்க எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கு போட்டு பார்த்து உப்பு எடுக்கும், விற்கும் உரிமையை அவன் கைவசம் எடுத்துக்கொண்டான்.
அதன் பிறகு, உப்பு விலை அதிகமானதால் ஒருகட்டத்தில் இந்தியர்கள் உப்பு போடமலே சாப்பிட ஆரம்பித்தார்கள். சிலர் உப்பிற்கு பதிலாக தும்பைச் சாற்றை பிழிந்து பயன்படுத்தினார்கள். வெள்ளைக்காரன் இப்படியெல்லாம் நம் மக்களை வதைத்து அட்டுழியம் செய்திருக்கிறான். வெள்ளைக்காரனின் சட்டத்தை மீறி ஆங்காங்கே உப்புக்குறவர்கள் திருட்டுத்தனமாக உப்பு விற்றதால் உப்புக்குறவர் இனத்தையே குற்றப் பரம்பரையில் சேர்த்தான். இது அந்த இனமக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி".