இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள்.
"லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்கள்தானே? அ.தி.மு.க. ஆட்சி வருமானால் உங்களின் சட்டையை கழட்டுவோம்'' என வெளிப்படையாகவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மிரட்டினார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய போலீஸார், "சி.வி.சண்முகம் உட்பட அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களுடைய பயத்தின் வெளிப்பாடுதான் இந்தப் பேச்சு'' என்கிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் கணக்கில்லாமல் வெளிப்படையாகவே நடந்தது. அதை எதிர்த்து தி.மு.க. போன்ற எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, அறப்போர் இயக்கம் போன்ற தன்னார்வ செயல்பாட்டாளர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டிய உத்தரவுகள் உயர்நீதிமன்றத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க.வின் அப்போதைய அமைச்சர்கள், லஞ்ச ஒழிப்புத்துறையை அவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவிடாமல் முடக்கினார்கள். அந்தத் துறையின் தலைவரான இயக்குநர் பதவிக்கு ஆளே போடவில்லை.
துணை இயக்குநராக இருந்த ராதிகா என்கிற டி.எஸ்.பி., எஸ்.பி.க்களாக இருந்த பொன்னி மற்றும் ஷண்முகம், டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி ஆகிய நான்கு பேரும் அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்த வேலுமணி, ராஜேந்திரபாலாஜி போன்றோர் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை' என சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சான்றிதழ் கொடுத்தார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கந்தசாமி என்கிற ஐ.ஜி. பொறுப்பேற்றார். ஆனால் ராதிகா, பொன்னி, ஷண்முகம் போன்ற அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அப்போது டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதியிடம், கந்தசாமி "அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு சாதகமாக செயல்படும் ராதிகாவை வைத்துக்கொண்டு என்னால் தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை. உடனே ராதிகாவை மாற்றுங்கள்'' என்றார். டி.ஜி.பி. திரிபாதி செய்யவில்லை. தொடர் மோதலுக்குப் பின், ராதிகாவை லஞ்ச ஒழிப்புத்துறை பதவியைவிட வெயிட்டான திருச்சி சரக சட்டம்-ஒழுங்கு டி.ஐ.ஜி.யாக திரிபாதி மாற்றினார். அங்கிருந்தும் தகவல்கள் போய்க்கொண்டிருந்ததால், வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியபோது சில லட்சங்களை மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்ற முடிந்தது. உடனே ராதிகாவை சென்னைக்கு மாற்ற வைத்து, பவானீஸ்வரி என்கிற நேர்மையான அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொண்டுவந்தார் கந்தசாமி.
பவானீஸ்வரி நேரடியாக ரெய்டுக்கு தலைமை தாங்கினார். தங்கமணியின் சொத்துக்களை ரெய்டு செய்தபோது, பவானீஸ்வரி சேலத்தில் வந்து தங்கினார். மொத்தம் 69 இடங்களில் ரெய்டு நடந்தது. "ரெய்டு எங்கே நடக்கிறது, எப்படி நடக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கே தெரியாது. எங்கே ரெய்டுக்குப் போக வேண்டும் என்கிற முகவரியை பவானீஸ்வரி ஒவ்வொரு டீமுக்கும் கொடுத்தார். யார் வீட்டுக்கு ரெய்டுக்குப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் போலீசார் சென்றார்கள்'' என லஞ்ச ஒழிப்புத்துறையில் நடந்த மாற்றத்தைச் சொல்கிறார்கள் போலீசார்.
தி.மு.க. ஆட்சி அமைந்த உடனே கந்தசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் விபரங்களை சேகரிக்க ஆரம்பித்தார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒரு ஹோட்டல் நடத்துகிறார். அந்த ஹோட்டலில் அவர் எவ்வளவு பணம் போட்டிருக்கிறார், அதற்கான பத்திரப் பதிவு எங்கு நடந்தது என அனைத்து விபரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிவிட்டது.
"முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒரு கல் குவாரி நடத்துகிறார்' என வருமானவரித்துறைக்கு கூட தெரியாது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை மிகச் சரியாக அங்கு சென்றது. இது முன்னாள் அமைச்சர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த விஷயம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு வழக்கில், ஒரு ரூபாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்து, அதை முறையாக விளக்காமல் போனதால் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது போல 4 வருடம் நிச்சயம் தண்டனை கிடைக்கும். வேலுமணி தவிர இதுவரை ரெய்டுக்குள்ளான நான்கு முன்னாள் அமைச்சர்கள் மீதும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால், தி.மு.க. ஆட்சிக் காலத்திற்குள்ளேயே அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள். சசிகலாவை போல 6 வருடம் தேர்தலில் நிற்க முடியாது. அந்த வரிசையில் ஓ.பி.எஸ்., எடப்பாடி ஆகியோரை கொண்டுவரவும் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கந்தசாமி முனைப்புடன் இருக்கிறார் என்கிறார்கள் உயரதிகாரிகள்.
அதேநேரத்தில், "முன்னாள் அமைச்சர் மேல் பாய்கிறார்கள், அதிகாரிகளை விட்டுவிடுகிறார்கள். வேலுமணியுடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன், பிரகாஷ், ஜெகநாதன் ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை? முன்னாள் அமைச்சர் காமராஜுடன் சேர்ந்து ஆயிரக் கணக்கான கோடி ஊழலில் சம்பந்தப்பட்ட சிவில் சப்ளையைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காப்பாற்றப்பட்டிருக்கிறார்'' என பரபரப்பாக குற்றம்சாட்டுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்.