மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கடந்த ஆண்டு கட்சி தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அவரின் கட்சி போட்டியிடும் என்றும் தானும் போட்டியிடுவேன் என்றும் தனது கருத்தை உறுதியாக முன்வைத்துவந்தார்.
இந்த நிலையில் தற்போது வருகின்ற 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் தனது கட்சியின் சார்பாக 40 வேட்பாளர்களையும் இரண்டு கட்டமாக அறிவித்தார். முதல் கட்டத்தில் அவரின் பெயரை அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் அறிவிக்கவில்லை. அதன்பின் அறிவித்த இரண்டாம் கட்டம் வேட்பாளர் பட்டியலிலும் அவரின் பெயரை அவர் அறிவிக்கவில்லை. இது அவரின் ஆதரவாளருகளுக்கும் அவரின் கட்சியனருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதனை தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் அவருக்கு தோல்வி பயம் என்றும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் இது பின் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விமர்சனம் செய்தனர். இதற்கு விளக்கமளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், தான் சட்டமன்றத்தில் போட்டியிடுவேன் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் இது தொடர்பாக தொடர்பு கொண்டோம்.
கமலஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில், தான் போடியிடவில்லை என்று அறிவித்துள்ளார். இது தோல்வி மற்றும் பின்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நிற்கவில்லை என்று விமர்சனம் எழுந்து வருகிறதே?
தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். விமர்சகர்கள் சொல்லும் விளைவுகள் எல்லாம் இதில் தோல்வி ஏற்பட்டாலும் வராதா? இவர்களாக பல கற்பனைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். முக்கியமான காரணம் எங்களுடையது சின்னக் கட்சி, தற்போதுதான் ஆரம்பித்து இருக்கிறோம். இன்னும் நிர்வாக ஆளுமையே பெரியதாகவில்லை, எங்களின் ஒரே முகம் அவர்தான்.
இரண்டாம் கட்டத் தலைவர் என்பதும்கூட யாருக்கும் யாரையும் தெரியாது. அதனால் அவரே அனைத்து இடத்திற்கும் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு தொகுதி என்று ஒதுக்கினால் அவர் அங்கேயே தங்க வேண்டிய நிலை உருவாகும். அவரின் உழைப்பு மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேவைப்படுகிறது எனும் காரணத்தை தவிர வேறு இல்லை. அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்திற்கு என்ன முடிவு வருகிறதோ அதுவேதான் அவருக்கும்.
திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கினார், 2006-ல் தேர்தலை சந்தித்தார். ஆனால் கமல் தயங்குவது ஏன் என்று விமர்சனம் எழுந்து வருகிறதே?
அவர்கள் சந்தித்தது சட்டமன்றத் தேர்தல். அதில் ஆளுக்கு ஒரு தொகுதி மட்டுமே. ஆனால் இது நாடாளுமன்றத் தேர்தல். இதில் ஒரு வேட்பாளருக்கு 6 சட்டமன்றத் தொகுதியை பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி நாட்களும் மிகவும் குறைவு. வெறும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. இதுதவிர விஜயகாந்த் அதற்கு முன்பாகவே அரசியல் கலத்தில் சில விஷயங்களை செய்துகொண்டிருந்தார். அதுவே இவர் ஒரு வருடமாகத்தான் அரசியலில் இருக்கிறார். மேலும் எங்களிடம் இருக்கும் தொண்டர்களும் மிகவும் நடுத்தர மற்றும் மிதவாதியான தொண்டர்கள். அதனால் பயம் எனும் கருத்தை ஒப்புக்கொள்ள முடியாது. சினிமா வரலாறிலும் சரி, அரசியல் வரலாறிலும் சரி கமலஹாசனுக்கு பயம் என்பதே கிடையாது.
ஆரம்ப காலத்திலிருந்தே இதுபோன்ற விமர்சனங்கள் அவரை தொடர்வதற்கு காரணம், அவரின் முடிவுகள் வித்தியாசமானதாக இருக்கும். அவர் முதலில் ட்விட்டரில் கருத்து சொல்லும்போது, களத்திற்கு வரவேண்டியதுதானே அதைவிட்டுவிட்டு எங்கிருந்தோ கருத்து சொல்கிறாரே என்றார்கள். வந்த பிறகு, அவரின் கட்சி ஒன்றும் கட்டமைப்புடன் இல்லை என்றார்கள். அதையும் காண்பித்த பிறகு, தேர்தலில் நிற்க வேண்டும் என்றார்கள். அதையும் செய்தபோது நீங்கள் நிற்கவில்லையா என்கிறார்கள். இப்படி இவர்களுக்கு கேள்விகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கும், இவரும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார். கட்சி ஆரம்பித்த கடந்த ஒருவருடத்தில் பொது பிரச்சனைகளுக்காக பயணம் மேற்கொண்டதும் கருத்து தெரிவித்ததற்குமே கிட்டத்தட்ட 200 நாட்கள் செலவு செய்திருப்பார். அவர் அலுவலகத்திற்கு வந்ததைவிட களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம்.
திடீரென்று மம்தா பானர்ஜியை சந்தித்ததின் காரணம்?
அந்தமான் நிக்கோபார் தீவில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறார். மம்தா பானர்ஜியும் தங்கள் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இருக்கிறது என்று அறிவித்துள்ளார். இதனை கமலே தெரிவித்துள்ளாரே?
வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி இருக்கிறது என்று சிலர் தெரிவிக்கிறார்களே?
வேட்பாளர் தேர்வில் அதிருப்தி என்பது பெரிதாக இல்லை. சொல்லப்போனால் தரமான வேட்பாளர்கள் எனும் கருத்து தான் அதிகமாக இருக்கிறது. கட்சிக்குள் சிலருக்கு சிறு ஏமாற்றம் இருந்திருக்கலாம் அது ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது. கட்சியின் வளர்ச்சி மீதும் தலைவரின் மீது அன்பும் இருந்தால் இந்த சின்ன ஏமாற்றங்களை அவர்கள் கடந்துவிடுவார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு அவர்களுக்கான அங்கிகாரம் நிச்சயம் கிடைக்கும். இது அனைத்து கட்சிகளிலும் நடக்கக்கூடிய விஷயம் தான்.
வெற்றிப் பெறாத கட்சியை வைத்திருக்கும் கமல் எந்த தேர்தல் அறிக்கையையும் வெளியிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளாரே?
அவர் நாடி ஜோசியம் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் இவர் கட்சி வெற்றிபெறாது என்று எப்படி சொல்ல முடியும். இவரே வெற்றி பெற்றுள்ளார். கட்சிகள் கொடுக்கும் அறிக்கையை விமர்சித்து விவாதம் நடத்தலாம். ஆனால் இவர்கள் அடிப்படை கேள்வியையே தனி மனிதர்கள் மீதுதானே வைக்கிறார்கள். அப்படியென்றால் எங்களிடம் வேறு எது குறித்தும் கேள்வி கேட்க வழியில்லாமல் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
திருப்பூரில் உங்கள் கட்சிக்காரர் வெங்கடேஷ் என்பவர், தான் கட்சிக்காக அதிகம் உழைத்தும் வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் அதிகம் உழைக்காதவருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் நான் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். உங்கள் (கமல்) மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் உங்கள் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் நியாயமாக நடக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளாரே?
அந்த ஆடியோவில் தலைவர் மீது நம்பிக்கை உள்ளது என்பது வரை பாசமாக ஒரு தலைவன் மீது அன்பு கொண்டவர் பேசுவதுபோல் இருக்கும். அதை தாண்டி சென்றால் மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதில் முன்னும் பின்னும் நிறைய முரண்பாடு இருக்கிறது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை தாண்டி வேறு எதுவும் இருக்காது.