தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியின் சிட்டிங் தி.மு.க. எம்.பி. வேலுச்சாமி, கடந்த தேர்தலில் 5 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் எனப் பெயர் பெற்றார். எனவே இந்த முறையும் தி.மு.க. நேரடியாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எனக் கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கூட்டணிக் கட்சியான சி.பி.எம்.க்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 1989 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அப்போது வரதராஜன் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் வெற்றி பெற்றார். அதன் பின் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியை அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிகள் தான் வெற்றி பெற்று வந்தன. அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி, திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது.
35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் சி.பி.எம். போட்டியிடுகிறது. சி.பி.எம். பொறுத்தவரை மாநிலத் தலைமையில் யாரை கை நீட்டுகிறார்களோ அவர்தான் வேட்பாளராக களம் இறங்குவார்.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநில செயற்குழு உறுப்பினரும் மூன்று முறை திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பாலபாரதி தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் முடிந்த அளவுக்கு தீர்த்து வைத்து அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தும் இருக்கிறார். அதோடு தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடியவராகவும் இன்னும் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட தோழருக்கும் பாராளுமன்றத் தொகுதியில் போட்டிப் போட வாய்ப்பு இருப்பதாகவும் தோழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
அதுபோல் சென்னையைச் சேர்ந்த மத்திய கமிட்டி உறுப்பினரான வாசுகிக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்டு குறைந்த ஓட்டில் தோல்வியைத் தழுவிய மாநில செயற்குழு உறுப்பினரான பாண்டிக்கும், மாவட்டச் செயலாளராக இருக்கக் கூடிய சச்சிதானந்தம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும் சொல்லப்படுகிறது.
மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தான், யார் வேட்பாளர் என்பது முடிவு செய்யப்படும் என்று தோழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.