Skip to main content

"மாசத்துக்கு ஒருமுறை இவர் கொடுத்த பேட்டியே நான் அமைச்சராவதற்கு காரணம்..." - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

ரகத


திமுகவில் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக அமைச்சர்களால், கட்சி நிர்வாகிகளால் திமுக தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாக ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், அதில் பேசிய அவர், " இன்றைக்கு ஆவடி கூட்டத்திற்கு அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு வந்துள்ளேன், நான் இளைஞரணியில் செயலாளர் பதவி கிடைத்தவுடனே முதன்முதலில் இங்கு வந்துதான் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இப்போதும் முதல் கூட்டம் இங்கே நடந்துகொண்டுள்ளது. மற்ற இடங்களில் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டச் செயலாளர்கள் தேதி வாங்கிக்கொண்டு செல்வார்கள். ஆனால் இந்தக் கூட்டத்திற்கு நானே வருகிறேன் என்று தேதி கொடுத்தேன்.

 

இதையெல்லாம் தாண்டி அண்ணன் தஞ்சை கூத்தரசன் அவர்களுடன் இணைந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவது என்பது பெருமையாக உள்ளது. பெரியாரோடு, அண்ணாவோடு, தலைவர் கலைஞரோடு இணைந்து அரசியலில் பணி செய்தவர். அவர் இருக்கும் இடத்தில் இருப்பது என்பதே மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதுகிறேன். முரசொலி அறக்கட்டளையில் இயக்குநராக இருந்தபோது அடிக்கடி அண்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்போது சந்தித்தபோது கூட பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பாக முரசொலியில் போட்டி ஒன்றை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இங்கே வந்திருப்பவர்கள் எல்லாம் நான் பேசுவதைக் கேட்பதற்காக வந்துள்ளதாகச் சிலர் கூறினார்கள், ஆனால் நான் அண்ணன் பேசுவதைக் கேட்பதற்கே வந்தேன். 

 

அவர் போட்டிருக்கும் மஞ்சள் சால்வையைப் பார்த்தால் கலைஞருடைய மறு உருவமாகத்தான் எனக்குத் தெரிகிறார். இங்கே பேசியவர்கள் கூறினார்கள் புதிய பதவியில் வந்துள்ளீர்கள் என்று, எத்தனையோ பொறுப்புக்கள் வரும் போகும், ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாகச் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் நான் அமைச்சர் ஆவதற்குக் காரணமே அண்ணன் நாசர் தான், மாசத்துக்கு ஒருமுறை எந்த தொலைக்காட்சியிலாவது நான் அமைச்சர் ஆக வேண்டும் என்று பேட்டி கொடுத்துவிடுவார். தலைவருக்கு யாரை எப்போது கொண்டு வரவேண்டும் என்பது நன்றாகத் தெரியும். தற்போது அவர் இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்கள், அதனைச் சிறப்பாகச் செய்து முடிப்பேன்"என்றார்.