கடந்த கால கசப்பான அனுபவத்தால் ‘இந்த முறையும் ஏமாறத் தயாரில்லை.. எங்களையும் கூப்பிட்டு பேசுங்க..’ என தேமுதிக, தேர்தல் கூட்டணிக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. தேமுதிகவுக்கு இப்படி ஒரு நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? அதன் தேர்தல் கால அரசியல் பக்கங்களைப் புரட்டுவோம்!
2016-ஆம் ஆண்டில் எல்லா கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. ‘மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி’ என பாமக தனி ரூட்டில் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பக்கம் போவதா? அந்தப் பக்கம் போவதா? என தேமுதிக ஊசலாட்டத்தில் இருந்தது. காங்கிரசும், தேமுதிகவும் தம் வசமிருந்தால், 6-வது முறையாக அரியணை ஏறிவிட முடியும் என கணக்குப் போட்டார் கலைஞர். அதனால், வெளிப்படையாகவே அழைப்பு விடுத்த அவர், தேமுதிக-வின் வருகையை தனக்கே உரிய பாணியில் ‘கூட்டணி அமைப்பதில் திமுக தரப்பில் இழுபறி எதுவும் இல்லை. திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்வது பழம் நழுவிப் பாலில் விழும் நிலையில் உள்ளது.’ என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக, திடுதிப்பென்று கலைஞரை அவரது வீட்டில் விஜயகாந்த் சந்தித்த பிறகு, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சீட் ஷேரிங், ஆட்சியில் பங்கு போன்ற விஷயத்தில், தேமுதிகவின் எதிர்பார்ப்புக்கு திமுக பிடி கொடுக்கவில்லை. தேமுதிக மூன்று இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால், 50 தொகுதிகள் வரை தருகிறோம் என திமுக தரப்பில் கூறியதாக, அப்போது பரவலாக பேசப்பட்டன.
இதற்கிடையே, அதிமுகவுக்கும் தேமுதிக தூதுவிட்டுப் பார்த்தது. ஆனால் ஜெயலலிதா, தேமுதிகவை தனித்துவிட வேண்டும் என்று காய் நகர்த்தியதால், அதிமுக கூட்டணியில் அப்போது சேர முடியவில்லை. ஏனெனில், 2011 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளைப் பெற்று 28 தொகுதிகளில் வென்ற விஜயகாந்த், சட்டமன்றத்தில் தன்னெதிரே நாக்கைத் துருத்திப் பேசியதை மறக்கும் மனப்பான்மையில் ஜெயலலிதா இல்லை. அதனால், தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டார். கடைசி வரைக்கும் போக்கு காட்டிக்கொண்டே இருந்து, இறுதியில் திமுகவுடன் சேருவதுதான் கேப்டனின் திட்டமாக இருந்தது. ஆனால், அதற்கு வழியில்லாமல் போனதால், மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார். அந்தக் கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்து, வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் என 4 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், நான்கிலும் தோற்றது. கூட்டணி விருந்தில் முதலில் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக, அக்கட்சிக்கு 7 தொகுதிகள், பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கியது. 7 தொகுதியில் அவர்கள் தோற்றாலும், மாநிலங்களவையில் அன்புமணிக்கு இடம் கிடைத்தது.
கடந்த முறை போல, இந்த முறையும் ஏமாந்துவிடக் கூடாது என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘இப்ப வரைக்கும் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம். ஜனவரியில் எங்களது முடிவை, கேப்டன் பொதுக்குழுவை கூட்டி அறிவிப்பார்’ என நவம்பர் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறார். ஆனால், ஜனவரியும் முடிந்துவிட்டது. பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணிக்காக மூன்று முறை சந்தித்துப் பேசிய அமைச்சர்கள், தேமுதிகவை உதாசீனப்படுத்தியே வருகின்றனர்.
தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கேட்டு அதிமுக தரப்பில் அப்படியொரு மலைப்பு. ‘அவர்கள் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்..’ என தனது சகாக்களிடம் எடப்பாடி பழனிசாமி தெளிவாகச் சொல்லிவிட்டாராம். இருந்தும் சென்னையில் ஜனவரி 31-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ‘இப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.
எனவே, கூட்டணிப் பேச்சை உடனே தொடங்குங்கள்..’ என்று அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்தார். ‘தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம்..’ என்று அவர் ஒப்புக்குச் சொன்னாலும், உள்ளுக்குள் உதறல் இல்லாமல் இல்லை. ஆனாலும், ‘சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி..’ என்றெல்லாம் பேசி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.