மனித கையின் கட்டைவிரல் அளவிற்கு இருக்கும் பெரியதொரு ராட்சத பெண் தேனீ, இந்தோனேசிய தீவுகளில் உள்ள வடமோலுகாஸ் எனும் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உலகில் இதுவரை அழிந்துவிட்டதாக கருதப்பட்டுவந்த இந்த வகைத் தேனீ தற்போது கண்டறியப்பட்டிருப்பது, பூச்சியியல் அறிஞர்கள் மத்தியில் பெரும் புத்துணர்ச்சியை தந்துள்ளது. இந்த வாலேஸ் தேனீயை கண்டுபிடித்ததன் மூலம் உலகிலேயே அரிதான, அதிகமாக தேடப்படும் பூச்சிகளும் இந்த தீவில் நிறைந்திருக்கலாம் என்ற நம்பிக்கையும் பூச்சியியல் அறிஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
6 செ.மீ அளவிற்கு வளரும் வாலேஸ் தேனீ பற்றிய விளக்கமளித்த பிரிட்டிஷ் இயற்கை மற்றும் ஆய்வாளர் ஆப்ஃபிரெட் ரசுல் வாலஸின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. 1858-ம் ஆண்டு வாலேஸ் தேனீ பற்றிய விளக்கத்தை இவர் அளித்து இருக்கிறார்.
அதுவரை வாலேஸ் தேனீ பற்றிய தெளிவான விளக்கத்தை வேறு அறிஞர்கள் அளித்து இருக்கிறார்களா என்பது பற்றிய சரியான தகவலும் கிடைக்கவில்லை என்பதாலும் இவரின் பெயர் அந்த தேனீக்கு சூட்டப்பட்டுள்ளது என்றும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தேனீ தொடர்பாக பலபேர், பல ஆண்டுகளாக தேடுதல் நடத்தியும் 2019-ம் ஆண்டு ஜனவரி இறுதி வரை யாருக்கும் இந்த வாலேஸ் தேனீ உயிருடன் இருப்பது தொடர்பான சரியான ஆதாரம் கிடைக்காமல் இருந்தது.
ஆனால் ஜனவரி மாதம் தொடக்கத்தில் இயற்கை வரலாறு புகைப்படக்கலைஞர் கிளே போல்ட் தன் குழுவுடன் வடமோலுகாஸ் தீவில் தீவிரமான தேடலில் ஈடுப்பட்டுள்ளார். இவர்கள் குழு முதலில் ஒரு மர இடுக்கில் இந்த தேனீ கூட்டை கண்டுள்ளனர். அதன் பின் அதனை தொடர்ச்சியாக கண்காணிக்க வளர்ந்த வாலேஸ் பெண் தேனீ ஒன்றை கண்டுள்ளனர்.
இதைப் பற்றி இயற்கை வரலாறு புகைப்படக்கலைஞர் கிளே போல்ட் கூறும்போது, “இதற்கு முன்னால் உயிரிரோடு இருந்ததாக உறுதியாக சொல்ல முடியாமல் இருந்த வாலேஸ் தேனீ எங்கள் முன்னால் தலைக்கு மேலே பறந்து செல்வதை காட்டில் நேரில் பார்த்தபோது, பெரும் ஆச்சரியமடைந்தோம். மேலும் எனது தலைக்கு மேலே அதனுடைய ராட்சத இறக்கைகளை அடித்து பறந்து செல்லும்போது உருவான ஒலியை கேட்டதும் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்” என்றார்.