இனிய தமிழை எளியநடையில் இயம்புகின்ற 'தினத்தந்தி' நாளிதழை தொடங்கி, படிக்காத பாமரனையும் படிக்க வைத்தார் சி.பா.ஆதித்தனார். அவரது மகன் சிவந்தி ஆதித்தனார், பத்திரிகை மட்டுமின்றி, விளையாட்டு, ஆன்மீகம், தொழில் என சகலகலா வல்லவராக திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டி திறந்திருக்கிறது தமிழக அரசு. 60 சென்ட் நிலத்தில் ரூ.1.34 கோடி செலவில் கட்டப்பட்ட மணிமண்டபத்தையும், திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்திருக்கிறார்.
சிவந்தி ஆதித்தனார் வரலாறு:
சி.பா.ஆதித்தனார்–கோவிந்தம்மாள் தம்பதிகளின் மகனாக 1936 செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்த சிவந்தி ஆதித்தன், சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார்.
சி.பா.ஆதித்தனார், 1942ல் தினத்தந்தியைத் தொடங்கி, பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தன் ஈடுபட்டார்.
சிவந்தி ஆதித்தனிடம் 1959ஆம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பு வந்தது. அவரது நிர்வாகத் திறமையில், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களிலும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வெளிவருகிறது. இன்றும் அதிக வாசகர்கள் கொண்ட பத்திரிகை என்ற பெருமையை தினத்தந்தி தக்க வைத்திருப்பதற்கு காரணம் சிவந்தி ஆதித்தனாரின் உழைப்பு தான்.
விளையாட்டிலும் சாதனை:
பத்திரிகை துறையில் மட்டுமல்லாமல், அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என விளையாட்டுத் துறையிலும் பங்களிப்பை வழங்கினார். பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி தொடங்கி திறம்பட நிர்வகித்து வந்த சிவந்தி ஆதித்தனார், ஆன்மீகப் பணிக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக திகழ்ந்தார். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தை கட்டிக் கொடுத்து, இன்றும் அந்த பகுதி மக்களால் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்றே அழைக்கப்படுகிறார்.
வாரி வழக்கும் வள்ளல்:
வள்ளல்களுக்கு 'இல்லை' என்று சொல் தெரியாது என்பதை சிவந்தி ஆதித்தனோடு பழகியவர்களுக்கும், அவருக்கு கீழே வேலை பார்த்தவர்களுக்கும் தெரியும். உதவி என்று கேட்டு செல்பவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்கு நிவர் அவரே. இன்றும் பல ஊர்களில் சிவந்தி ஆதித்தனார் பெயரை தாங்கி நிற்கும் பள்ளிக்கட்டிடங்களும், திருமண மண்டபங்களும், வணிக வளாகங்களும் அதற்கு சாட்சி.
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, சிவந்தி ஆதித்தனுக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
"மல்லிகைப் பூமணக்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை. அதைப் போல் உலகம் உள்ளவரை பத்திரிகை உலகின் முன்னோடி" என்ற பெருமை சிவந்தி ஆதித்தனாரையே சாரும்.!