Skip to main content

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.